ராமேஸ்வரத்தில் மொட்டை அடிக்க 300 ரூபாய்..? தமிழ்நாடு அரசு உத்தரவை மீறி வசூல்... அரசு நடவடிக்கை எடுக்குமா?

 

கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மொட்டையடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் உள்ள அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் எந்தக் கோயிலிலும் இனி, மொட்டை அடிக்க பக்தர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் மொட்டை அடிக்க 300 ரூபாய்  வசூல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மகாளய அமாவசை என்பதால் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்கள் தங்களின் முன்னோர்களை வழிபட்டு பின் மொட்டை போட்டு கொண்டனர். பக்தர்களுக்கு மொட்டை போட 200 முதல் 300 ரூபாய் வரை கட்டணமாக கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளது.
மொட்டை போட  அரசு இலவசம் என அறிவித்துள்ளதே எனக் பக்தர்கள் கேட்டதற்கு அக்னி தீர்த்த கடற்கரையில் போட்டால்தான் இலவசம் என்றும் மற்ற இடங்களில் போட்டால் காசு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். செய்வதறியாத பக்தர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு மனவேதனையுடன் சொந்த ஊருக்குச் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த காவலர்கள், அதிக கட்டணம் வசூல் குறித்து மொட்டை போடும் நபர்களிடம் கேட்டதற்கு பதில் கூறாமல் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று அதே கட்டணத்தை வசூல் செய்து மீண்டும் வேறு நபர்களுக்கு மொட்டை போட்டு உள்ளார்.

இதுகுறித்து திருக்கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, திருக்கோவில் பணியாளர்கள் யாரும் இன்று மொட்டை போடவில்லை, வெளி நபர்கள் சிலர் மொட்டை போட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது எனவும் அது போன்ற தவறுகள் நடைபெறுவதாகத் தகவல் வந்தால் காவல்துறை மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.