அறநிலையத்துறை சார்பில் 2 பெண்கள் கலைக்கல்லூரி... விரைவில் முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் சேகர்பாபு

 

சென்னையில் புதிதாக 2 பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கல்லூரியின் ஆண்டு மலரை அமைச்சர் பொன்முடி வெளியிட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார். விழாவின் முடிவில் கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் க.பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

விழாவில் உரையாற்றிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 33% இடஒதுக்கீடு, அரசு பணிகளில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலனுக்காக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் பெண்களுக்காக 2 மகளிர் கலை கல்லூரி தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.” என்று தெரிவித்தார்.