நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கு; நாளை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

 

தமிழ்நாடு முழுவதும் நாளை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இதுவரை 7 கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாளை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது 70 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக அவர் கூறினார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாகவும், மருத்துவ குழுக்கள் மூலம் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.