ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் பூஜை செய்ய நல்ல நேரம் எது?

 

நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர நவராத்திரி சிறப்பாக கொலு அமைத்தும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி பூஜையின் முப்பெரும் தேவிகளை கும்பிடும் போது வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் பெற்றிட முடியும். உடல் வலிமையை வெளிப்படுத்தும் சக்தியாக துர்கா தேவியையும், வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளத்தை நல்க கூடியவராக ஸ்ரீமகாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரக் கூடிய கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய தினங்களாகும். இந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு பத்தாவது நாள் மூன்று தேவியரும் பராசக்தியாக எழுந்தருளி மகிஷாசுர அசுரனை வதம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இதனையே விஜயதசமியாக நாம் கொண்டாடி வருகிறோம்.

சரஸ்வதி பூஜை, விஜயதசமி தேதி, நேரம் :

இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகியன இன்று (அக். 23) திங்கட்கிழமையும், விஜயதசமி விழா நாளை (அக். 24) செவ்வாய்கிழமையும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுதங்களுக்கு பூஜை செய்வதற்குரிய முகூர்த்த நேரமாக அக்டோபர் 23-ம் தேதி பகல் 2.18 முதல் 3.04 வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. தசரா எனப்படும் விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக அக்டோபர் 24-ம் தேதி மாலை 5.22 முதல் 6.59 வரையிலான நேரம் கணிக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி பூஜை வழிபடும் முறை:

வீடு வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து திருநீறில் பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பின்பு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். தற்போது பெரும்பாலானோர் மாவிலை கிடைக்காததால் பிளாஸ்டிக் மாவிலையை கடையில் வாங்கி பயன்படுத்துகின்றனர். பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து சாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு முன்பு வினை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

மேலும் பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து, அருகம்புல் ஆகியவை வைத்து வழிபட்ட பின்பு தான் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். பூஜையறையில் புத்தங்கள், பேனாக்கள் வைத்து பொட்டுவைத்து அலங்கரிக்கவும்.மேலும் வீட்டு உபயோக்கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் போன்றவற்றிலும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலுக்குரிய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

நீங்க எந்த தொழில் செய்பவராக இருந்தால் அதற்கு உதவும் கருவி அல்லது பொருளை சுத்தம் செய்து சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து பூ வைத்து வணங்க வேண்டும். பின்பு நெய்வேத்தியம் செய்வதற்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை பாயாசம் மற்றும் பல வகையான பழங்களை வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். எங்கெல்லாம் பூஜை செய்தீர்களோ மணியடித்து நீரினால் மூன்றுமுறைச்சுற்றி நிவேதனம் செய்து விட்டு புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கும் நிவேதனம் செய்யவும்.பிறகு சூடம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபடவும். விபூதி, குங்குமம் மற்று பொரிக்கடலை ஆகியவற்றை எல்லாருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்யவும்..