ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் பூஜை செய்ய நல்ல நேரம் எது?

 

நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் இந்த மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

இதை நினைவுபடுத்தும் விதமாகவே சரஸ்வதி பூஜை அன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும், நம்முடைய வாழ்விற்கு ஆதாரமாக திகழும் பொருட்களை வைத்து கொண்டாடுகிறோம். நவராத்திரி விழாவின் நிறைவாக பத்தாவது நாளில் அம்பிகை மகிஷனை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

வீடு, வாசல், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து திருநீரை தண்ணீரில் குழைத்து பட்டை போட்டு அதில் சந்தனத்தையும் குங்குமத்தையும் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்துவிட்டு பூக்களை வைத்து அலங்கரிக்க வேண்டும். பிறகு ஒரு மனைக் கட்டையை வைத்து அதில் புத்தகங்களுக்கு பொட்டு வைத்து அடுக்கி வைக்கவும். பின்னர் விளக்கேற்றி, சாம்பிராணி புகை போட்டு, சுண்டல், பொரிக் கடலை, வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் வைத்து படைக்க வேண்டும்.

மேலும் பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து, அருகம்புல் ஆகியவை வைத்து வழிபட்ட பின்பு தான் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். மேலும் வீட்டு உபயோக்கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் போன்றவற்றிலும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலுக்குரிய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

நீங்க எந்த தொழில் செய்பவராக இருந்தால் அதற்கு உதவும் கருவி அல்லது பொருளை சுத்தம் செய்து சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து பூ வைத்து வணங்க வேண்டும். பேருந்து, லாரி, ஆட்டோ ஓட்டுபவர்கள் உங்கள் வாகனத்தில் சந்தனத்தை கரைத்து வாகனம் முழுவதும் தெளித்துவிடலாம்.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை இன்று (அக்டோபர் 11) கொண்டாடப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் பூஜை செய்யும்  முகூர்த்த நேரமாக பகல் 12.15 முதல் 01.15 மணி வரை நல்ல நேரமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகலில் செய்ய இயலாதவர்கள் மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை பூஜை செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விஜயதசமி விழா அக்டோபர் 12-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இது புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பது குறிப்பிடதக்கது. விஜயதசமி அன்று காலை 10.30 மணிக்கும் மதியம் 1 மணி வரை சாமி கும்பிட நல்ல நேரமாக உள்ளது. மாலையில் 4.30 முதல் 6 மணி வரை சாமி கும்பிடலாம்.