திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆழித்தேரோட்டம்.. 2 ஆயிரம் போலீசார் குவிப்பு.. குவிந்த பக்தர்கள்!
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் இன்று காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், சைவ சமய பீடத்தின் மிகப் பெரிய தலமாகவும், சர்வ தோஷங்களையும் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இங்கு பிறந்தாலே முக்தி என்ற சிறப்புப் பெற்ற தலம். இங்கு இருக்கும் ஆழித்தேர் உலகிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது.
திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் ஆழித்தேரில் செய்யப்பட்டுள்ளது. தேரின் எடை 220 டன் ஆகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகிறது. இதுதவிர தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் ஆழித்தேரின் மொத்த எடை 350 டன்னாகும்.
தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 புல்டோசர்கள், 4 வீதிகளில் தேரை திருப்பவும், செலுத்தவும் முட்டுக்கட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது. தேரோடும் 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண்கள் கோடி வேண்டும் என்பார்கள்.
ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. முன்னதாக அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்படும். காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்ட விழாவையொட்டி சன்னதி தெரு உள்ளிட்ட கோவில் 4 திசைகளில் பல் பொருள் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் திருவாரூர் வந்துள்ளனர். ஆழித்தேரோட்ட விழாவில் மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.