188வது குருபூஜை விழா.. திருவாரூர் தட்சிணாமூர்த்தி மட குருபூஜையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

 

திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188-வது ஆண்டு குருபூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மடப்புரம் கிராமத்தில் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் மடம் அமைந்துள்ளது. இங்கு குரு தட்சிணாமூர்த்தி சுவாமி ஜீவசமாதி கொண்டுள்ளார். இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் பெற்றுப் பல சித்து வேலைகளைப் புரிந்தார் தட்சிணாமூர்த்தி சுவாமிகள். வியாதிகளுடனும் விரக்தியுடன் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார். 

நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் இறுதிக் காலத்தில் திருவாரூரை வந்தடைந்து மடப்புரம் பகுதியில் ஓடம் போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835-ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார்.

இந்த நிலையில் இந்த மடத்தில் 188-வது ஆண்டு குருபூஜை மகோற்சவம் வெகு விமர்சையாக நேற்று முன்தினம் (செப். 15) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த குரு பூஜை நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் குருபூஜை முன்னிட்டு நாள் முழுவதும் ஆலயத்தில் அன்னதானமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.