சேர்ந்தபூமங்கலம் கோவில் பிரதோஷம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

 

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலம் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், நவகைலாயங்களில் கடைசி தலமாக கருதப்படுகிறது. இந்த கோவிலை குலசேகரப் பாண்டியன் மற்றும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்கள் கட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கோவிலில் மாசி மாத சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை அமாவாசை ஆகிய வருடாந்திர விழாக்களும், பௌர்ணமி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி போன்ற மாதாந்திர பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இக்கோவிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. இதை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.