வரும் 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி வருகிற 27-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனமாகும்.

அதன்படி நடப்பாண்டிற்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு வருகிற 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடலூர் மாவட்டம் , சிதம்பரம் நடராஜர் கோவில் (சபாநாயகர் கோவில்) ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 27.12.2023 (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 06.01.2024 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 27.12.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தப்பட்ச பணியாளர்களோடு செயல்படும்” என கூறப்பட்டுள்ளது.