இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

மேல்மலையனூர் திருத்தேர் விழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 14) விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்காளம்மன் கோவிலில் வீற்றிருக்கும் அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள் என்கிறது தல வரலாறு. நான்கு திருக்கரங்களுடன் இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தொங்கவிட்டபடி பிரம்ம கபாலத்தை மிதித்தவாறு வடக்கு திசை நோக்கி அருட்காட்சி புரிகிறார் அம்மன். புற்று வடிவில் தோன்றிய இந்த அம்மனுக்கு புற்று தேவி என்றும் பெயருண்டு.

இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், ஒவ்வொரு வருடமும் மாசி மாத பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 8-ம் தேதி மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகியது. அதனைத் தொடர்ந்து, 9-ம் தேதி மயான கொள்ளை விழாவும், 12-ம் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சிகர திருவிழாவான தேரோட்டம் இன்று (மார்ச் 14) நடைபெறுகிறது. இந்த முக்கிய திருவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 14  திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில்  அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலம் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு  தேர்வுகள்  வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 23-ம் தேதி பணிநாளாக செயல்படும்” என அறிவித்துள்ளார்.