ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறப்பு

 

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகர விளக்கு சீசனை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். கனமழையிலும் பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

இன்று (ஜூலை 16) முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதனால் பக்தர்கள் இன்று முதல் வருகிற 20-ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பூஜை முடிந்து 20-ம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.