ராமேஸ்வரம் டூ காசி.. அரசு செலவில் ஆன்மீக பயணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு!
ஆன்மீக சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் காசிக்கு செல்வதற்கான இலவச பயணத் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை மூலம் இலவச ஆன்மீக சுற்றுலா பயணத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி திருக்கோவிலுக்கு அழைத்து செல்லப்படுகிறது. இதற்காக அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
மண்டலத்திற்கு 15 பேர் வீதம் மொத்தம் 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். நடப்பு நிதியாண்டில் இலவச ஆன்மீக சுற்றுலாவிற்கு விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி தேதியாகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆன்மீகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.
இதில் சில நிபந்தைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வயதினரும் இலவச ஆன்மீகப் பயணத்தில் பயணிக்க முடியாது. 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வேறு என்னென்ன நிபந்தனைகள் எனக் கேள்வி எழலாம். இன்னும் இருக்கின்றன. அதாவது, இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது. எனவே வட்டாட்சியரிடம் இருந்து வருமான சான்று கொண்டு வர வேண்டியது அவசியம். இந்த இலவச ஆன்மீகப் பயணம் மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். எனவே போதிய உடல் தகுதி தேவை. அரசு மருத்துவரின் சான்று கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
இதுதவிர இருப்பிட ஆதாரம், ஆதார் அட்டை ஆகியவை அவசியம். இந்த பயணத்தின் போது தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், பொருட்களை பயணிகள் தான் கொண்டு வர வேண்டும். சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை. மொத்தமாக தேர்வு செய்யப்படும் 300 பேரும் குழுக்களாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இந்த குழுவினர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக் கூடாது.
இந்த பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கும் என்பதால், மாநிலத்தின் வேறு எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருநாள் முன்பாக அங்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இதற்கான செலவு பயணிகளுடையது தான். மேலும் ராமநாதசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். முழு பயணமும் முடிந்த பின்னர் தங்கள் சொந்த செலவில் வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.