கோவில்பட்டி மாரியம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா.. பக்தர்கள் சாமி தரிசனம்!

 

கோவில்பட்டி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ராகு, கேது பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி ராகு கேது பெயர்ச்சி 2023 அக்டோபர் 8-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடந்தது. இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி 1ம் பாதத்திலிருந்து, மீனம் ரேவதி நட்சத்திரம் 4ம் பாதத்திற்கும், கேது பகவான் துலாம் ராசியில் சித்திரை 3ம் பாதத்திலிருந்து, கன்னியில் உள்ள சித்திரை 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகி உள்ளனர்.

இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் ரோட்டிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றது.

இந்த கோவிலில் மாலை 6 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், ஸ்தபன கும்பகலச பூஜை, யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராகு, கேதுவுக்கு மஞ்சள், பால், தேன், பன்னீர், சந்தனம் முதலான 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.