ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

 

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான நாளாகப் பிரதோஷம் கருதப்படுகிறது. சிவபெருமானுக்குச் செய்யப்படும் வழிபாடுகளில் பிரதோஷ வழிபாடு என்பது மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகும். பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்று பொருளாகும். அப்படிச் சிறப்பான இந்த நாளில் சிவபெருமானின் வழிபாடு செய்தால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும். பிரதோஷ காலமானது மாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரமாகும். திங்கட்கிழமை வரக்கூடிய பிரதோஷம் சோமவார பிரதோஷம் எனவும், சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷம் சனி பிரதோஷம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அதன்படி, அம்மாபேட்டை காவிரி கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி சிலைக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பஞ்சகாவியம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தை வலம் வந்தது. விழாவில் சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி, தேவூர், எடப்பாடி, நெடுங்குளம் மற்றும் அம்மாபேட்டை, குருவரெட்டியூர், சித்தார், பூனாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மகாளய பட்ச பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான திரவியங்கள் மூலமாக அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் மூலவர் மகேஸ்வரருக்கும் 16 வகையான அபிஷேக திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. உமா மகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் உள்பிரகார உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள மரகத ஈஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. பின்னர் பிரதோஷ மூர்த்தியுடன் பக்தர்கள் வலம் வந்தனர்.

மேலும் கோபி அருகே கூகலூரில் மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில், அமர பணீஸ்வரர் கோவில், கோபி பவளமலை கைலாசநாதர் கோவில், மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், காசிபாளையம் மூன்று முகம் முருகன் கோவிலில் உள்ள ஈஸ்வரன் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் நந்திவாகனத்தில் எழுந்தருளிய நாகேஸ்வரர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் இரட்டை நந்திக்கும், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள நந்திக்கும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.