திருப்பதியில் தங்கத்தேர் உற்சவம்.. பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என முழக்கம்
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று காலை தங்கத்தேரில் உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம் தொடங்கியது முதல் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்மம், முத்துப்பந்தல், கற்பக விருட்சம் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளில் கருடசேவையும், 6-ம் நாளில் அனுமன் வாகன பவனியும் நடைபெற்றது.
இந்த நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான நேற்று உற்சவர் மலையப்ப சுவாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு காலை 8 மணிக்கு துவங்கி 10 மணி வரை கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
வேத மந்திர கோசங்களுக்கு இடையே, திவ்ய பிரபந்த கானம், பஞ்ச வாத்திய இசை, பக்தர்களின் பக்தி கோஷம், பல்வேறு வகையான நாட்டியங்கள் ஆகியவற்றுடன் ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன புறப்பாடு நான்கு மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர். இரவு சந்திர பிரபை வாகன புறப்பாடு நடைபெற்றது.
இந்நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8வது நாளான இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கத்தேர் பவனி நடைபெற்றது. இந்த தங்கத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் மலையப்ப சுவாமி பவனி வந்தார். பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என முழக்கம் எழுப்பினர்.