ஏசு பிறந்த இந்த நாளில்…..

புவனம் முழுதும் கொண்டாடும் இந்த டிசம்பர் மாதத்தின் 25 நாளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசுபிரான் இம்மண்ணில் பிறந்தார். நசரத் எனும் நகரில் மேரி எனும் இளம்பெண், இந்த உலகில் அமைதி நிலைநாட்ட வரும் தெய்வக் குழந்தையை கடவுளின் புனித சக்தியால் கருத்தறித்தார் என வரலாறு கூறுகிறது. அப்போது மேரிக்கு ஜோசஃப் என்பவருடன் நிச்சயம் நடந்திருந்தது. ஜோசஃபுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் இருந்தது. ஆனால் கேப்ரியல் எனும் தேவதையின் வாயிலாக இந்தச் செய்தி ஜோசஃபுக்கு சொல்லப்பட்டவுடன் அவர் மேரியை மணம் முடித்துக் கொண்டார். அந்த சமயத்தில் ரோம்
 

புவனம் முழுதும் கொண்டாடும் இந்த டிசம்பர் மாதத்தின் 25 நாளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசுபிரான் இம்மண்ணில் பிறந்தார். நசரத் எனும் நகரில் மேரி எனும் இளம்பெண், இந்த உலகில் அமைதி நிலைநாட்ட வரும் தெய்வக் குழந்தையை கடவுளின் புனித சக்தியால் கருத்தறித்தார் என வரலாறு கூறுகிறது. அப்போது மேரிக்கு ஜோசஃப் என்பவருடன் நிச்சயம் நடந்திருந்தது. ஜோசஃபுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் இருந்தது. ஆனால் கேப்ரியல் எனும் தேவதையின் வாயிலாக இந்தச் செய்தி
ஜோசஃபுக்கு சொல்லப்பட்டவுடன் அவர் மேரியை மணம் முடித்துக் கொண்டார்.

அந்த சமயத்தில் ரோம் நாட்டை ஆண்ட அகஸ்டஸ் எனும் மன்னர், அந்த நாட்டின் குடிமக்களின் பட்டியலை தயாரிக்குமாறு உத்தரவு போட்டார். அப்பொழுது குடிமக்கள் அனைவரும் அவரவரின் நகருக்கு திரும்பவேண்டும் எனக் கூறினார். நிறைமாத  கர்ப்பிணியாக இருந்த மேரியுடன் ஜோசஃப் நசரத்தை விட்டு, 70 மைல்கள் தூரமிருந்த தன் நகரமான பெத்லஹெமுக்கு புறப்பட்டார். மக்கள் அனைவரும் நடந்தோ அல்ல கழுதைகள் மீதோ அவரவர் நகரங்களுக்கு பயணம் செய்தனர். 

பெத்லஹெமில் நிறைய மக்கள் குவிந்ததால் மேரிக்கும் ஜோசஃபுக்கும் தங்க வீடு கிடைக்கவில்லை. கால் நடைகள் கட்டிவைக்கப்பட்ட ஒரு கொட்டகையில் அவர்களுக்கு இடம் கொடுத்தனர் அங்கிருந்தவர்கள். அங்குதான் மேரி தன் குழந்தை ஏசுவை பெற்றெடுத்தார்.
ஏசு பிறந்தது குளிர்காலமாதலால், குழந்தையை கம்பளியில் சுற்றி வைக்கோல் மேல் சூடாக வைத்தனர் அவர் பெற்றோர். அந்த வைக்கோல் தொட்டிலிலிருந்து ஆடு, மாடுகள் உண்டன என்கிறது வரலாறு.

ஏசு பிறந்த அன்று மலைகளிலும், வெளிகளிலும் ஆடுமாடுகள் மேய்ப்பவர் முன், தேவதைகள் தோன்றி இந்த மண்ணின் அமைதி காக்க ஒரு தெய்வக் குழந்தை பிறந்திருப்பதாகவும், அந்தக் குழந்தை ஒரு மாட்டுக் கொட்டகையில் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் பாடினர். உடனே அந்தக் குழந்தையைக் காண ஆடு, மாடு மேய்ப்பர்கள் சென்றார்கள். அந்தத் தெய்வீகக்  குழந்தையைக் கண்டு திரும்பும் போது அவர்கள் கடவுள் தன் குழந்தையை பூமிக்கு அனுப்பியதற்கு நன்றிச் சொல்லி பாடியாடினர். 

அந்த இரவு வானில் இதுவரை யாரும் கண்டிராத வகையில் மிகப் பிரகாசமான நட்சத்திரம் ஒன்று தோன்றியது. வெகுதொலைவிலிருந்து சில அறிவாற்றல் கொண்ட மூன்று மனிதர்கள் அந்த நட்சத்திரத்தின் தோற்றம் எதைக் குறிக்கிறதென்று அறிந்து அதன் திசை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் ஜெருசலம் எனும் நகர் அருகில் வழி கேட்கும் பொழுது நாட்டை காப்பாற்ற ஒரு பேரரசன் பிறந்துள்ளான். அவன் பிறந்த இடம் எங்கெயெனக் கேட்டனர்.

இதைக் கேட்ட ஒற்றர்கள் தங்கள் மன்னர் ஹெராட்டிடம் இந்தச் செய்தியைக் கூற அவர் அந்த மூன்று மனிதரையும் தன்னிடம் வருமாறு உத்தரவிட்டார். பின் அவர்களிடம் அந்த தெய்வக் குழந்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தனக்கு அந்த இடம் எங்கேயெனக் கூற வேண்டும். தானும் அக்குழந்தையை வணங்க ஆசை கொள்வதாகக் கூறினார். ஆனால் உண்மையில் அந்தக் குழந்தை தன் அரசைப் பிடிக்காமல் இருக்க, அதைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்.

நட்சத்திரத்தை பின் தொடர்ந்து வந்த அந்த மூவரும் பெத்லஹெமில் நட்சத்திரம் ஒரு கொட்டகைக்கு மேல் பிரகாசித்து நின்றவுடன், ஏசு பிறந்த இடத்தை அடைந்தனர். அவரைத் தொழுது தாங்கள் கொண்டு வந்த பொன் பொருட்களை பரிசாகக் கொடுத்து திரும்பினர். ஆனால் ஹெராட் மன்னரின் தீய எண்ணத்தை உணர்ந்து, ஏசு இருக்கும் இடத்தை அவர்கள்
அம்மன்னருக்கு கூறவில்லை. 

இவ்வறாக இந்த மண்ணில் தோன்றிய மகான் ஏசு உலகில் அமைதியை காக்கவும், அன்பைப் பேணவும் நிறைய போதித்துள்ளார். அதற்காக அவர் நேர்கொண்ட இன்னல்கள் கணக்கிலடங்காதவை. அதற்காகவே அவர் தன் உயிரையும் தியாகம் செய்து போனார் எனபது நாம் அறிந்ததே.

மனிதம் களைந்து மதவாதம் பெருகிவரும், இந்த நாட்களில் நாம் அனைவருமே ஏசுபிரானின் வழிகாட்டுதலை கொஞ்சம் கவனிக்க வேண்டும். ஏசுபிரான் ஒரு போதும் மதம் சார்ந்து எந்தப் பிர்ச்சாரங்களும் செய்யவில்லை. அவர் இந்த மண்ணில் அனைவரும் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும் என்றே போதித்தார். அவரின் வழிகாட்டுதல்களுக்கு கிறித்துவ மதம் என மதச்சாயம் பூசியது, அவருக்கு பின் தோன்றிய மக்களே ஆவர். 

நாம் ஒவ்வொருவரும் வெறுப்பை அன்பாக மாற்றினால் சினத்தை கருணையாக மாற்றினால்
உலகில் மகிழ்ச்சி நிலைக்கும் என்றார் ஏசு. நாம் ஒவ்வொருவரும் பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என எண்ணுகிறோமோ, அதன்படியே நாம் அவர்களை நடத்தினால் எங்கும்
அமைதி நிலவும் என்றார் ஏசு. நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு இறை வழிபாடு செய்தால் நன்மைகள் பயக்கும் என்றார் ஏசு. நாம் ஒவ்வொருவரும் பிறர் நமக்கு செய்யும் தீமைகளை மனதார மன்னித்து,மறந்துவிட்டால், நாம் நம் மனச் சங்கலிகளிலிருந்து விடுபட்டு நிம்மதி கொள்வோம் என்றார் ஏசு.

ஏசு பிரான் கூறியது போல் பிறரை அன்புடன் நடத்துதல், இறை நம்பிக்கை, சினம் கொள்ளாமை, பிறர் மீது கருணை கொள்ளுதல், பிறருக்கு தீயது செய்யாமை, நமக்கு தீயது செய்பவரை மன்னித்தல் இவை அனைத்தும் நம் அடிப்படை மனித குணங்களானால், நமக்குள் எந்த மதப்பாகுபாடும் வராமல் நாம் ஒன்றாக வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழலாம். இதுவே ஏசுபிரான் பிறந்த இந்த நாளில் நாம் உணர வேண்டியவை. எந்தக் கடவுளும் தங்களுக்காக நாம் ஒருவருடன் ஒருவர் சண்டைகள் போட்டுக் கொள்ளவோ,  அவர்களுக்கு ஆட்கள் சேர்க்கவோ கூறவேயில்லை. அதனால் மதத்தின் அடிப்படையில் நம்மை பிரித்தாளச் செய்யும் அதிகார வர்க்கத்தை நாம் கட்டாயம் புறம் தள்ள வேண்டும்.

இருண்ட வானில்
நட்சத்திரம் மின்ன
உலகிற்கு
இறைவன் வந்தான் இன்று

வறண்ட மண்ணில்
வான்மழைப் பெய்து
உலகிற்கு
வளமை தந்தான் நின்று

பிரிவினை வேண்டாம்
அன்பு கொள் என்று
உலகிற்கு
சட்டம் வகுத்தான் நன்று

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.