ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்.. 96 அடி உயரம் கொண்ட தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்..!

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சின்னத்தில் இந்தக் கோவில் கோபுரமே அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 30-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரமான இன்று காலை 9.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 7 வடங்களையும் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக தேரை இழுத்து வருகின்றனர்.

தேருக்கு பின்னால் இரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவினை முன்னிட்டு நேற்று இரவு பூப்பல்லக்கில் ஆண்டாள் வீதி உலா வந்தார். தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்தனர். இந்நிலையில் ஆண்டாளுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பெருமாள் கோவிலில் இருந்து மங்களப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன.