ஒவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
பூக்கள் பூத்த தருணம்
“பூக்கள் பூக்கும் தருணம் பார்த்ததாரும் இல்லையே” ஆம். பூக்கள் பூக்கும் சரியான நேரத்தில் பார்த்துவிட வேண்டும் என்ற கவிஞரின் ஆசை இந்தவரியைக் கேட்டதும் அனைவருக்குள்ளும் ஆவலைத் தூண்டும். பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை இதைக் கேட்டதும் பூக்களைத் தேடி ஆசைகள் அணிவகுப்பு நடத்தும். இப்படிப் பூக்களைக் கொண்டு கவிஞர்கள் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைத் தந்துள்ளனர். பாடல்கள் கேட்கும் போதும், பூக்கள் பற்றிய கவிதைகளைப் படிக்கும் போதும் மனம் மகிழும். ஆசை அவிழும்.
பெயர் மறந்து போன, காலங்களில் மறைந்து போன பல செய்திகளை, மனிதர்களை, வாழ்முறைகளை மீட்டெடுக்க உதவுவது சங்க இலக்கியங்கள். அடே! இது நமக்குத் தெரிந்த ஒன்று எனச் சில நேரங்களில் ஆச்சர்யப்படுத்தவும் செய்கின்றது இலக்கியங்கள். இது போன்ற செய்திகளை, வாழ்வியல் அனுபவங்களை, தன் கண்முன் நடந்தவற்றை, தான் அனுபவித்த, தன்னை மயக்கிய, இரசிக்கச் செய்த ஒவ்வொன்றையும் தகுந்த இடத்தில் உள்ளதை உள்ளபடிப் பதிவு செய்த சங்கப் புலவர்களைத் தமிழன் போற்றிக் கொண்டாட வேண்டும். தமிழ் மக்கள் தாண்டு எட்டுத் திக்கும் தமிழர் சிறப்புகள் கொண்டு சேர்க்க வேண்டும்.
தான் வாழ்ந்த பகுதியில் இருக்கின்ற அனைத்தும் தெரிந்து, அதன் தன்மை அறிந்து வாழப்பழகினான். தான் வாழ்ந்த காலத்தில் இருந்த பூக்களைத் தொகுத்துச் சொல்லும் அளவிற்குப் புலவர்கள் அறிவியல் பார்வையும், ஆர்வமும் கொண்டிருந்தனர். குறிஞ்சி நிலத்தில் நீராடும் பெண்கள் அருவியில் விளையாடி விட்டு, அங்குச் சுற்றிலும் உள்ள மலர்களைப் பறித்துக் பாறையில் குவிப்பர் என்ற செய்தியைக் கூறுகின்றார் கபிலர். அதுவும் 99 பூக்களின் பெயர்களையும் வரிசைப்படுத்திக் கூறுயிருப்பது குறிஞ்சிப்பாட்டின் சிறப்பு.
பாடலின் குறிப்பு
எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன்
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று- தோழி
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)
பாறையில் மலர் நிறைத்தனர் பெண்கள்
….. ….. …… ……. வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல்,அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி, புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான், பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல்,பெருந் தண் சண்பகம்,
கரந்தை, குளவி,கடி, கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம்,சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,
ஞாழல், மெளவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல்,கைதை, கொங்கு, முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் அத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை,பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந்தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருத்தும், வேங்கையும், பிறவும்,
அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்,
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி, (61-97)
மலர்களே மலர்களே
- வள் இதழ் ஒண் செங்காந்தள் – பெரிய இதழ்களோடு ஒளிதரும் சிவந்த காந்தள் மலர்/செங்காந்தள்
- ஆம்பல் – ஆம்பல் மலர்
- அனிச்சம் – அனிச்சப் பூ
- தண் கயக் குவளை – குளுமையான நீர் நிறைந்த் குளத்தில் இருக்கும் குவளை மலர், (செங்கழு நீர்ப்பூ) (தண்- குளிர், கயம்- குளம்)
- குறிஞ்சி - குறிஞ்சிப்பூ
- வெட்சி - வெட்சிப்பூ
- செங்கொடுவேரி – செங்கொடுவேரிப் பூ
- தேமா – இனிப்புச் சுவை கொண்ட மாமரம்
- மணிச்சிகை – மணிச்சிகைப் பூ/செம்மணிப்பூ
- உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ்–தனக்கு உரித்தான தனி மனத்துடன் மலரும் பூங்கொத்துகளை உடைய மூங்கில் பூ
(உரிது – உரித்தான, நாறு-மணம்,அவிழ் –மலரும், தொத்து – பூங்கொத்து, உந்தூழ் – மூங்கில் பூ) - கூவிளம் – வில்வப் பூ
- எரிபுரை எறுழம் – நெருப்பினைப் போன்ற எறுழம் பூ
(எரி – நெருப்பு, புரை – போன்ற) - சுள்ளி- மாமரப்பூ
- கூவிரம் – கூவிரம் பூ,(வில்வமரப் பூ)
- வடவனம் – வாடவனப் பூ
- வாகை – வாகைப் பூ
- வான் பூங் குடசம் – வெண்மையான பூவினை உடைய மலை மல்லிகை, வெட்பாலைப் பூ
- எருவை – பஞ்சாய்க்கோரப் பூ, நாணல்
- செருவிளை – வெண்காக்கனம் பூ
- மணிப் பூங் கருவிளை – நீல மணி போன்ற பூக்கள் கொண்ட கருவிளம் பூ
- பயினி – பயினிப் பூ
- வானி – வானிப் பூ
- பல் இணர்க் குரவம் – பல இதழ்கள் உடைய குரவம் பூ, (இணர்- இதழ்)
- பசும்பிடி – பச்சிலைப் பூ
- வகுளம் - மகிழம்பூ
- பல் இணர்க் காயா – பல இதழ்கள் உடைய காயாம்பூ
- விரி மலர் ஆவிரை – விரிந்த மலர்களை உடைய ஆவிரை மலர்
- வேரல் – சிறிய மூங்கில் பூ
- சூரல் – சூரைப் பூ
- குரீஇப் பூளை – சிறிய பூளைப் பூ, (வெற்றிப் பூ)
- குறுநறுங் கண்ணி - குன்றிப்பூ
- குருகிலை – முருக்கிலைப் பூ
- மருதம் – மருதப் பூ
- விரி பூங்கோங்கம் – விரிந்த பூக்களை உடைய கோங்கப் பூ, இலவமரப் பூ
- போங்கம் – மஞ்சாடிப் பூ
- திலகம் – மஞ்சாடி மரத்தின் பூ
- தேங்கமழ் பாதிரி – தேன் மணக்கும் பாதிரிப் பூ
- செருந்தி – செருந்திப் பூ
- அதிரல் – அதிரப் பூ
- பெருந் தண் சண்பகம்- குளிர்ந்த பெரிய செண்பகப் பூ
- கரந்தை – கரந்தைப் பூ
- குளவி – காட்டு மல்லிப் பூ, பன்னீர்ப் பீ
- கடி கமழ் கலி மா- மணம் தவழும் தழைத்த மாம்பூ
- தில்லை – தில்லைப் பூ
- பாலை – பாலைப் பூ
- கல் இவர் முல்லை – கல்லில் பல்ரும் முல்லைப் பூ
- குல்லை – கஞ்சங்குல்லைப் பூ
- பிடவம் – பிடவம்பூ,
- சிறுமாரோடம் – செங்கருங்காலிப்
- வாழை – வாழைப் பூ
- வள்ளி – வள்ளிப் பூ
- நீள் நறு நெய்தல் – நீண்ட நறிய நெய்தல் பூ
- தாழை – தென்னம் பாளை
- தளவம் – செம்முல்லைப் பூ,
- முள் தாள் தாமரை – முள்ளை உடைய தண்டினைக் கொண்ட தாமரை
- ஞாழல் – புலிநகம் போன்ற கொன்ரைப் பூ
- மெளவல் – காட்டு மல்லிப்பூ
- நறுந்தண் கொகுடி, நல்ல குளிர்ந்த முல்லைக்கொடி
- சேடல் – பவள மல்லிகை
- செம்மல் - சாதிப்பூ
- சிறுசெங்குரலி – கருந்தாமக் கொடிப் பூ
- கோடல் - வெண் காந்தள் பூ
- கைதை - தாழம்பூ
- கோங்கு முதிர் நறு வழை – தாதுக்கள் முதிர்ந்த சுரபுன்னை
- காஞ்சி –காஞ்சிப் பூ, பூவரசம் பூ,
- மணிக் குலைக் கள் கமழ் நெய்தல் – நீலமணி போன்ற கொத்துகளை உடைய தேன் ஊறுகின்ற கருங்குவலைப் பூ
- பாங்கர் – பாங்கர்க் கொடிப் பூ
- மராஅம் – மரவம் பூ, வெண் கடம்பு, குங்குமரப் பூ
- பல்பூந் தணக்கம் –பல பூக்களை உடைய தணக்கம் பூ, நுணா என்னும் கொடியில் உள்ள பூ
- ஈங்கை – இண்டம் பூ,
- இலவம் - இலவம் பூ
- தூங்கு இணர்க் கொன்றை – கொத்துகளாகத் தொங்குகின்ற கொன்றைப்பூ
- அடும்பு – அடும்பம் பூ,
- அமர் அத்தி – ஆத்திப் பூ
- நெடுங்கொடி அவரை – நீண்ட கொடியில் மலருகின்ற அவரைப் பூ
- பகன்றை – பகன்றைப் பூ
- பலாசம் – பலாசம் பூ
- பல் பூம் பிண்டி – பல பூக்களுடன் இருக்கும் அசோகம் பூ
- வஞ்சி – வஞ்சிப் பூ
- பித்திகம் – பிச்சிப் பூ
- சிந்து வாரம் – கரு நோச்சிப் பூ
- தும்பை – தும்பைப் பூ
- துழாஅய் – திருத்துழாய்ப் பூ
- சுடர்ப் பூந் தோன்றி – விளக்குப் போன்ற பூவினை உடைய தோன்றிப் பூ
- நந்தி – நந்தியா வட்டப் பூ
- நறவம் – நறவம் பூ
- நறும் புன்னாகம் – நறு மணமுள்ள புன்னாகப் பூ
- பாரம் – பருத்திப் பூ
- பீரம் – பீர்க்கம் பூ
- பைங் குருக்கத்தி – பச்சை நிறக் குருக்கத்திப் பூ
- ஆரம் – சந்தனப் பூ
- காழ்வை – அகில் பூ
- கடி இரும் புன்னை – மணமுள்ள பெரிய புன்னைப் பூ
- நரந்தம் – நாரத்தம் பூ
- நாகம் – நாகப் பூ
- நள்ளிருள் நாறி – இருவாட்சிப் பூ
- மா இருங் குருத்தும் – கரிய பெரிய குருந்தம் பூ
- வேங்கையும் – வேங்கைப் பூ
பிறவும் – பிற பூக்களயும் - அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன் – அரக்கை விரித்தால் போன்று/சாதிலிங்கத்தை விரித்து வைத்தால் போன்று பருத்த அழகிய மலை எருக்கம் பூ
மால் அங்கு உடைய – அம்மலர்களின் அழகினாலும், மணத்தாலும் மயங்கினோம்
மலிவனம் – மலி- மகிழ்ச்சி, வனம் – மிகுதி – ஆசை மிகுதியால்
மறுகி – திரிந்து பறித்து.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை எனும்படி, நீராடி, விளையாடி வகைவகையான 99 மலர்களையும் பிற பூக்களையும் கண்டனர். அதன் மணத்தாலும், அழகினாலும் உள்ளம் மயங்கி ஆசை அதிமாக, அங்குமிங்கும் அலைந்து, திரிந்து பூக்களைப் பறித்தனர். பூப்பறிக்க வருகிறோம் என்ற சிறுவயது விளையாட்டின் நினைவுகளைத் திரும்பத் தருகின்றது இந்தப்பாடல் பூக்களோடு.
இத்தனை பூக்களையும் வைத்து என்ன செய்வது? பூமாலையாக்கித் தோள் சேர்க்கலாம். பூச்சரங்களாக்கி கூந்தல் சூடலாம். இப்பூக்களை எங்கு காண்பது? எப்படித் தேடுவது? தேடாமல் வாழ்க்கை இல்லை.
நம் முன்னோர் விட்டுச் சென்ற ஒப்பற்ற செல்வங்களில் இது போன்றவற்றைத் தேடிக் கண்டறிந்து, போற்றிப் பாதுகாத்து, மறந்தும், அழிந்தும் போகாமல் மீட்டெடுக்க வேண்டியவை. மாற்ற முடியாத மாற்றங்கள் நிறைந்த வாழ்வில் இவ்வகை அரிய பூவினங்களைக் பல காலங்கள் தாண்டியும் அறிந்து கொள்வது நம் பேறு. இப்படியான நூல்களைப் பாதுகாத்து அளித்தோரையும், தன் பாடல்களில் எழுதிப் பதிவு செய்த கபிலரையும் வாழ்த்திப் பூவினம் மாநாடு போடும்; வண்டுகள் சங்கீதம் பாடும். இயற்கை இசைபாடி ஆடும்.
கதை வளரும் - சித்ரா மகேஷ்
முந்தைய வாரம் : அழகின் அழகு அருவி