ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
                        சொல்லின் அழகி தோழி

 

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள்தோறும் வீசும் பூங்காற்றைக் கேளு
என் வேதனை சொல்லும்…
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும்”…

எனும் பாடல் காதலனைப் பிரிந்திருக்கும் காதலி வருந்திப் பாடுவதைச் சொல்கின்றது. தமிழனின் வாழ்வில் இன்ப, துன்பங்களைச் சொல்லக் கவிதைகளும், பாடல்களும் காலத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தபடும் வழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியம் என்பது காலம் கடந்தும் எதாவது ஒரு வழியில், ஒரு வடிவில் மனிதனோடு பயணம் செய்யும் என்பதைக் காதல் உறவு குறித்த சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றது.

காதல் உறவு ஏற்பட்டதைக் காதலன், காதலி இருவரின் நண்பர்கள் என்போர் மட்டுமே தொடக்கத்தில் அறிந்திருப்பர். காதல் உயிர்களை உடைக்கின்றது என்பதற்கேற்பக் காதலனைப் பிரிந்து தன் இயல்பு வாழ்நிலை மாறுவதுகூடத் தெரியாமல் தன்னை மறந்து, உயிரும், உள்ளமும் உடைந்து இருக்கிறாள் காதலி. அவளின் செயல்பாடுகளுக்கான காரணங்களை அறிந்து, அவளைச் சரிசெய்ய நினைக்கும் தாயிடம் தோழி, தான் தெரிந்து கொண்ட செய்திகளைக் கூறுகின்றாள்.

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறப்பினும் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை 
-- - - - - - - - - -- - - - - - - - - - - -- - -- - -- - -- - -

பாங்குற வந்த நாலெட்டு வகையினும்
தாங்கரும் சிறப்பின் தோழி மேன. (தொல் - களவியல்- 113)

எனத் தோழி பேசுவதற்குரியதான சூழல்கள் அமையும் 32 இடங்களைத் தொல்காப்பியத்தின்வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்… (தொல் - பொருள்-113)

அதாவது தாய் தலைவியைச் சந்தேகப்படுவதை மாற்றி உண்மையை எடுத்துச் சொல்வது குறித்தும் இலக்கணம் சொல்கிறது தொல்காப்பியம்.

தாயிடம் காதலியின் நிலையை எடுத்துச் சொல்லும் தோழியின் சொல்வன்மையை உணர்த்திடக் கபிலர் தான் எழுதிய குறிஞ்சிப்பாட்டில் சொல்லும் வரிகளை அதன் இலக்கணத்தின்படியே அமைத்துள்ளார்.

தோழியின் சொல்வன்மை

நல் கவின் தொலையவும், நறும் தோள் நெகிழவும்,
புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும்,
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்து, யான் கடவலின், (9-12)

அருஞ்சொற்பொருள்

நல் கவின் – நல்ல அழகு
தொலையவும் – கெடுமாறும்,
நறுந் தோள் – நறுமணம் உடைய தோள்
நெகிழவும் – மெலியவும்
புள் - கை வளையல்
பிறர் அறியவும் – மற்றவர்கள் அறியவும்
புலம்பு - தனிமை
வந்து அலைப்பவும் – கொண்டு வருத்திடவும்
உள் கரந்து – உள்ளத்துக்குள் மறைந்து
உறையும் - தங்கியிருக்கும்
உய்யா – உயிர் பிழைக்க முடியாத, தாங்க முடியாத
அரும் படர் –அரிய நோய்
செப்பல் - சொல்லும்
வன்மையின் - வலிமையால்
செறித்து- நெருக்கி
யான் – நான்
கடவலின் – கேட்டதினால்…

பாடலின் பொருள்

என்னுடைய தோழியின் நல்ல சிறப்பான அழகு கெடுமாறும், அவளின் நறுமணம் உடைய தோள் மெலிந்திடவும், கைகளில் இருக்கும் வளையல்கள் கழன்று விழுமாறும், தனிமையில் அவள் வருத்தப்படவும், அவள் உள்ளத்துக்குள் மறைந்திருக்கும் உயிரை வருத்துமாறு தாங்க முடியாத அரிய நோய் கொண்டது எப்படி என்று, என் சொல்லின் வலிமையால் வற்புறுத்திக் கேட்டுச் சொல்ல வைத்தேன்.

எளிய வரிகள்

அழகின் அழகு தொலைந்திட
மணக்குமவள் தோள்கள் மெலிந்திட
வளையல்கள் கைகள் இழப்பதைக்
காண்போர் அறிந்திட…
உள்ளம் தனிமை கொண்டு வருந்திட
மறைத்து வைத்திருக்கும் துன்பம்
நிறைந்த கதை என்னவென்று
அவளே சொல்லும்படிச் செய்தேன்
என் சொல் அன்பினால்…
என் சொல் அம்பினால்…

இந்தப்பாடலில் காதலியின் உடலில் மாற்றங்களோடு இருப்பதைச் சொல்வதே புறஞ்செயச் சிதைதல். தன் பெற்றோர் உள்ளிட்ட உறவுகளும், நட்புகளும் சுற்றி இருந்த நேரத்திலும் காதலனையே எண்ணித் தனியே தவிப்பவளாய் இருப்பாள். அந்த உணர்ச்சி மீண்டும் மீண்டும் தோன்றி அவளை வருத்தும். அதைச் சொல்வதே “புலம்பித் தோன்றல்” என்பதாகும்.

புறஞ்செயச் சிதைதல் புலம்பித்தோன்றல்
புலம்பிய …………………………மொழிப. (தொல் -பொருள்-264)

காதல் காலங்களில் காதலர்களுக்கு உள்ளத்தில் ஏற்படும் துன்பத்தை உடலில் ஏற்படும் மாற்றங்கள் காண்பவர்களுக்குச் சொல்லிவிடும். அந்த மாற்றங்கள் எப்படி இருக்கும். என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதையும் தமிழ் இலக்கணம் சொல்கின்றது. களவு மற்றும் கற்புக் காலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பிரித்துத் தனியாக விளக்கமும் உள்ளது. கபிலரும் களவு வாழ்க்கையின் இலக்கண விதிகள் மாறாது காதலைக் கதையாகத் தன் பாடலில் சொல்லியுள்ளார்.

மனிதனின் மாபெரும் திறன்களில் பேச்சாற்றலும் ஒன்று. பேரரசுகளுக்கு இடையே நடக்கவிருந்த போரினைத் தடுத்து நிறுத்தும் சொல்வன்மை கொண்டவர்கள் வாழ்ந்த பெருமைக்குரியது தமிழ் உலகம். தன் பேச்சினால் நாட்டின் தலைமைப் பொறுப்பை அடைந்த ஆளுமைகள், சமூகப் புரட்சிகளுக்கு வித்திட்ட உரைகள் எனச் சொல்லின் ஆற்றலைச் சொல்லும் உண்மை நிகழ்வுகளை இலக்கியங்களாகப் பதிவு செய்துள்ளனர். அம்முறையே காதல் வாழ்விலும் பேச்சுத்திறன் இன்றிமையாத செயலினை நிகழ்த்திக் காட்டியதைத் தோழியின் வாயிலாகக் கபிலர் அழகுற உணர்த்தியுள்ளார்.

ஒரு சொல் வரலாறானதும், ஒரு சொல்லால் வரலாறான கதைகளும் நமக்கு வாழ்க்கைப் பாடங்கள்.

                                                                                                                               கதை வளரும் - சித்ரா மகேஷ்

A1TamilNews

முந்தைய வாரம் 

பெத்த மனம் பித்து