ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
பெத்த மனம் பித்து
ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் இலக்கிய மரபையும், குறிப்பாகக் காதல் வாழ்வில் நிகழும் செய்திகளை உணர்த்துவதற்குக் கபிலர் பாடியது. எனவே ஆரியர் வாழ்வியல் முறை வேறு, தமிழர் வாழ்வியல் முறை வேறு எனப் புரிந்து கொள்ள முடிகின்றது. வெவ்வேறாக இருந்தாலும் தோழமையுடன் அறிவு சார்ந்த உரையாடல்களும், பகிர்வுகளும் நிகழ்ந்தமைக்குச் சான்றாகக் குறிஞ்சிப்பாட்டைக் கூற முடியும். அதன்பின் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த செய்திகள் அனைத்தும் வரலாற்றுப் பதிவுகளாகக் கிடைக்கப் பெறுகின்றன. தமிழர்களின் காதல் வாழ்வினைக் கபிலர் கதை வடிவில் எழுதிய சிறப்புமிக்கக் காதல் ஓவியமே குறிஞ்சிப்பாட்டு.
தமிழர்களின் காதல் வாழ்க்கை வேறு எந்த நாட்டின் வாழ்வோடும் ஒப்பீடு செய்ய முடியாத தனித்தன்மையும், சிறப்பும் கொண்டது. காதல், திருமணம் என்ற வாழ்க்கைப் பகுதிகளைத் தமிழ் இலக்கியங்கள் உணர்வும், உறவும் கலந்து அழகுறச் சொல்கின்றது. தமிழனின் வாழ்க்கை, வாழும் நிலம் சார்ந்த ஒன்றாகவே வாழப்பட்டு வருகின்றது. நிலத்தின் இயல்போடு இயைந்து, இணைந்து அமைத்துக் கொண்ட ஆதிமனிதனின் வாழ்முறையைக் கண்டும், கேட்டுமறிந்த சங்கப்புலவர்கள் இலக்கியங்களில் அவற்றையே பாடுபொருள்களாக அமைத்துப் பாடினார்கள்.
முதல்முறையாகச் சந்தித்திக்கும் ஆண், பெண் இருவரின் உள்ளத்தில் நிகழும் உறவுநிலையின் மாற்றங்கள் பாடல்களில் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. சங்கப்பாடல்களின் மொழியின் ஆழம்வரை நிறைந்து கிடக்கும் தமிழை, தமிழனின் காதலை, வீரத்தை, காதலைப் பாடிய வரிசையில் காதல் ஏற்படும் சூழல், காரணம் எது? அதன் பின்னணி என்ன? அதற்குப் பின்னர் நடக்கும் செய்திகளை வரிசைப்படுத்தும் பாடல்கள் அடங்கிய அக இலக்கியம் குறிஞ்சிப்பாட்டு.
காதலிக்கத் தொடங்கித் திருமணம் வரை உள்ள நாள்கள் “களவு வாழ்க்கை” எனப்பட்டது. அந்தக் களவு வாழ்க்கையில் கிடைக்கப்பெறும் மகிழ்ச்சி வேறு எப்படியும், எதனாலும் ஈடு செய்ய முடியாதது. காதல் காலங்களில் ஏற்படும் நம்பிக்கையும், அன்புமே திருமண வாழ்க்கைக்கு அடித்தளம். அச்சிறப்புமிக்க வாழ்வைச் சொல்வதுதான் காதல் கதையைச் சொல்லட்டுமா….
காதல் தரும் துன்பங்கள்
தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியர் காதலுக்கும் விதிகளை முறைப்பட எழுதியுள்ளார். காதல் கொண்ட பெண்ணுக்கு ஏற்படும் உணர்வுகளாகத் தொல்காப்பியர் சொல்வது,
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்
சிறப்புடை மரபின் அவை களவென மொழிப. (தொல்,பொருள் -98)
அதாவது, வேறு நினைவில்லாமல் இருத்தல், உடம்பு மெலிதல், துன்பத்தை மறைத்துக் கொண்டு நலமாக உள்ளதாகச்சொல்லுதல், நாணத்தின் எல்லைகளை நீங்குதல், பார்ப்பவை எல்லாம் காதலிப்பவரின் உருவமே தெரிதல், மறத்தல், மயங்குதல், இறந்துபோவதை நினைத்தல் ஆகிய எட்டும் காதலிப்பதினால் அடையும் துன்பங்கள். இவை ஆணுக்கும் பொருந்தும் உணர்வுகளே.
இப்பாடலின் கதாநாயகியான காதலியின் நிலையும் தொல்காப்பியம் சொல்வது போலவே இருக்கின்றது. மகளின் இந்நிலை கண்ட தாய் வருந்துகின்றாள். அதற்கான காரணத்தைத் தோழி சொல்வதாகக் காதல் வாழ்க்கையின் ஆர்வமிக்க இனிய செய்திகளைத் தொகுத்து இலக்கண ஒழுங்குடன் சொல்லியுள்ளார் கபிலர்.
கதை
ஒருவனும், ஒருத்தியும் பொது இடத்தில் சந்தித்த முதல்நாளே, கண்கள் பேச, காதல் பெருக உள்ளங்களில் காதல்விதை விழுகின்றது. பின்னர் திரும்பத் திரும்பச் சந்திக்கும்போது விதை விருட்சமென வளர்ந்து, காதலெனும் இன்ப உலகில் மயங்கி நிற்கிறனர். இதுவரை அனுபவிக்காத அத்தனை இன்பத்தையும், மகிழ்வையும் அள்ளித்தருகின்றது காதல் வாழ்க்கை இருவருக்கும்.
சிறிது காலம் கழித்துக் காதலனைப் பிரிந்திருக்கும் காதலி பிரிவின் வலியைத் தாங்க முடியாது தவிக்கின்றாள். உண்ணாமல், உறங்காமல் உள்ளம் வாடி, உடல் மெலிந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க அவளின் தாயால் முடியவில்லை. காதல்தான் அனைத்துக்கும் காரணம் என்று அறியாத அம்மா, எப்படியாவது தன் மகளைக் குணமாக்க வேண்டுமென எண்ணிப் பல முயற்சிகளை மேற்கொள்கிறாள்.
தாயின் எண்ணத்தை அறிந்த மகள் தன் தோழியை அழைத்துத் தன் நிலையை விளக்கிச் சொல்லி, அதைத் தன் தாயிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறாள். தோழியும் தாயிடம் சென்று, எப்படி? எங்கு? காதல் ஏற்பட்டது, காதல் ஏற்பட வழிவகுத்த நிகழ்ச்சிகள் எவை போன்ற செய்திகளைத் தொகுத்துக் காதல் கதையைக் கூறுகின்றாள்.
பாடலின் குறிப்பு
எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புண்ர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன்
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று- தோழி
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)
காதலர்கள் காதலில் இணைந்த கதையைத் தோழி வளர்ப்புத் தாயிடம் சொல்லுதல்
(தோழி அறத்தொடு நிற்றல், வளர்ப்புத் தாய் – தோழியின் தாய்)
பாடல் -1
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல்,
ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,
வேறு பல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி (1-8)
அருஞ்சொற்பொருள்
அன்னாய் – தாயே, அம்மா
வாழி – நீ நீண்ட காலம் வாழ்க
வேண்டு அன்னை –நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக
ஒள் நுதல் – ஒளி பொருந்திய அழகு நெற்றி
ஒலி மென் கூந்தல் – அடர்ந்த/தழைத்திருக்கும் மென்மையான கூந்தல்
என் தோழி மேனி – என் தோழியின் மேனி
விறல் - சிறப்பான
இழை - அணிகலன்கள்
நெகிழ்த்த – நழுவச் செய்த, கழன்றிடச் செய்த
வீவு – அழிக்க முடியாத, குணப்படுத்த முடியாத
அரும் கடுநோய் – கடுமையான அரிய நோய்
அகலுள் – அகன்ற ஊரில், பெரிய ஊரினுள்
ஆங்கண் –. அழகிய இடத்தில், அங்கே
அறியுநர் – நடக்கப்போவதை முன்னரே அறிந்தவர்கள்
வினாயும் – கேள்விகள் கேட்டும்
பரவியும் – பாராட்டிப் பேசியும்
தொழுதும் - வணங்கியும்
விரவு –பலவித
மலர் தூயும் - மலர்கள் கலந்து தூவியும்
வேறு பல் உருவின் கடவுள் - வேறு பல உருவங்களில் உள்ள கடவுள்களை
பேணி – வழிபாடு செய்து
நறையும் – நல்ல நறுமணமுள்ள புகையையும்
விரையும் –நறுமணப் பொருள்களையும்
ஓச்சியும் - செலுத்தியும்
அலவுற்று – உள்ளம் வருத்தமடைந்து, கலங்கி
எய்யா – காரணம் அறியாமல்
மையலை – குழப்பமுடையவளாய், கலக்கமடைந்தவளாக
நீயும் வருந்துதி – நீ வருந்துகின்றாய்.
வேறு பல் உருவின் கடவுள் -- பல்வேறு முறைகளில், வேறுபட்ட வடிவங்களில், வெவ்வேறு பெயர்களிட்டு வணங்கும் வழக்கம் இருந்தாலும் ஒன்றென விளங்கும் ஆற்றலே கடவுள். அதைக்குறிப்பிடவே இத்தொடரைப் பயன்படுத்தியுள்ளார் கபிலர்.
பாடலின் பொருள்
அம்மா நீ நீண்ட காலம் வாழ்க. நான் கூறுவதைக் கேட்க வேண்டுகிறேன். நல்ல ஒளி கொண்ட நெற்றியையும், மென்மையான அடர்ந்த கூந்தலையும் உடையவள் என் தோழி. அவள் உடம்பில் அணிந்திருக்கும் சிறப்புமிக்க அணிகலன்கள் கழன்று விழுமாறு செய்த, குணப்படுத்த முடியாத நோயினைக் கொண்டிருக்கின்றாள் என்பதை அறிந்து நீ வருத்தப்பட்டு, செய்வதறியாது குழப்பம் அடைந்தாய். பின்னர், இந்தப் பெரிய ஊருக்குள் எதிர்காலத்தில் நடக்கப் போவதைச் சொல்லும் கட்டுவிச்சி, வேலன் ஆகியோரை வரவழைத்துக் கேட்டும், வேறு வேறு உருவத்தில் உள்ள தெய்வங்களை வழிபாடு செய்து கேள்விகள் கேட்டும், பாராட்டிப் பேசியும், வணங்கியும், பல்வேறு நிற மலர்களைத் தூவியும், நறுமணங்கள் தரும் புகையிட்டும், நறுமணப் பொருள்களைச் செலுத்தி, உள்ளம் வருத்தம் கொண்டு, காரணம் அறியாமல் குழப்பத்தினால் கலக்கமடைந்து நீயும் வருந்திக் கொண்டிருகின்றாய்.
கட்டுவிச்சி - அன்றைய காலத்தில் முறத்தில் நெல், அரிசி ஆகியவற்றைப் போட்டும், சோழிகளின் எண்ணிக்கையாலும் குறி சொல்வது உண்டு. இம்முறையைக் “கட்டுக்காணுதல்” என்றும், இது போன்று குறிசொல்பவர்கள் “கட்டுவிச்சி” எனவும் அழைக்கப்பட்டனர். குறி சொல்லும் நேரத்தில் தெய்வத்தை அழைத்துப் பாடுவதால் “அகவன் மகள்” என்ற பெயரும் உண்டு.
ஒருவர் உள்ளத்தில் எண்ணியது நிறைவேறுமா? இல்லையா? என்று அறிந்திடவும், துன்பக் காலங்கள் எப்பொழுது மாறும் எனத் தெரிந்து கொள்ளவும் குறி கேட்டல், சோழி போட்டுப்பார்த்தல் என எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளும் வழிகள் இன்றும் பழக்கத்தில் உள்ளது.
வேலன் – முருகனுக்குப் பூசை செய்து வெறியாட்டத்தை நடத்திக் குறி சொல்பவன்,
முருகன் – குறிஞ்சி நிலத்துக்கான தெய்வம்.
எளிய வரிகள்
நீண்ட காலம் நீ வாழ்க அம்மா
உன்னிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும்
ஒளி தரும் அழகு நெற்றியும், மென்மையான
நீண்ட கூந்தலும் கொண்ட அழகின் அழகி என் தோழி.
அவள் கொண்ட சிறப்புமிக்க அணிகலன்கள்
கழன்று விழுமாறு உடலை மெலிந்திடச் செய்த
குணப்படுத்த முடியா நோயால் வருந்துவது கண்டு,
பெரிய ஊருக்குள் எதிர்காலம் சொல்லும்
கட்டுவிச்சியைக் கேட்டாய்,வேலனிடமும் கேட்டாய்.
பல உருவம் கொண்ட தெய்வங்களை வழிபட்டுக்
கேள்விகள் கேட்டாய், பாராட்டுச் சொன்னாய்,
வணங்கி நின்றாய், மலர்கள் தூவினாய்,
நறுமணப் புகையிட்டு, நறுமணப் பொருள் தந்தாய்,
அத்தனை செய்தும், உள்ளம் வருந்தி அவள்
நோயின் காரணம் கண்டறிய முடியாது
கலக்கமுற்றுக் குழம்பித் தவித்து நீயும்
உள்ளம் உடைந்து வருந்துகின்றாய்.
காதல், இன்பம், பிரிவு, பெற்றோர் அறிதல், எதிர்ப்பு, காதலர்கள் இணைவதற்கு முன் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள், தோழியின் உதவி, தோழியின் குடும்பத்தினர் பங்களிப்பு என அத்தனையும் நாம் வாழும் இன்றைய காலத்திலும் நடப்பதைக் காணமுடிகின்றது. குறிஞ்சிப்பாட்டில் அன்று நடந்த காதலும், இன்று நடக்கும் காதலும் உள்ளபடி உணர்வில் ஒன்றுதான்.
காலந்தோறும் காதல் மனிதனோடு பயணம் செய்து வருகின்றது. காலங்கள் கடந்து போன வழியில் மொழிப் பயன்பாடு மட்டும்தான் மாறிப்போனது. அதைச் சிறிது மாற்றி எளிமையாக்கி அனைவரும் புரிந்து கொள்ளச் செய்வது அவசியம். உள்ளத்தில் தோன்றும் அன்புதான் காதல். அன்பை எப்படிப் பெயரிட்டாலும் அன்பின் தன்மை மாறாது;அழியாது.
எந்தக் காலத்திலும் தோழியைத் தவிர்த்துக் காதல் இல்லை. இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், காதலின், காதலியின் மனசாட்சியாகச் செயல்படும் உறவு தோழியாகும். என்றும் உறுதுணையாக இருக்கும் தோழி தன் தோழியின் காதலுக்குத் துணை நிற்கிறாள் சொல்கின்றது இவ்வாரத்தின் பாட்டு.
சின்ன வயதில் இவ்வளவு சாமர்த்தியமாகவும், பொறுப்புடனும் பக்குவமாகவும் பேசும் ஆற்றல் கொண்ட தோழி காதலுக்குப் பலம், காதலர்களுக்கு வரம்.
கதை வளரும் - சித்ராமகேஷ்
A1TamilNews