ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
                                               ஆணழகே பேரழகே

 

தாய்வழிச் சமூகத்திலிருந்து மாறிப்போன தமிழர் வாழ்வில் அழகும், அன்பும் பெண்ணுக்கு மட்டுமானதாக மாறிப்போனது. மாற்றப்பட்டது. வீரமும், ஆற்றலும் ஆணுக்கு உரியதாகிப் போனது. அதுவே தமிழ் உலகில் பழக்கமாகவும், வழக்கமாகவும் தொடர்கின்றது. பல காலங்களாகப் பெண்ணில் தலைமுதல் கால்வரை வர்ணிப்பது இலக்கியம், திரைப்பாடல் எனப் பல்வேறு தளங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த மாற்றம் பெண்மை, ஆண்மை எனச் சொல்லிப் பெண்ணை அடிமையாக்குவதுவரை கொண்டு சென்றது. அத்தகைய ஆண்மை எனும் சொல்லே அழிய வேண்டும் எனப் பெண்களுக்காகப் பலர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போராட்டங்கள் பெருமளவில் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. போராட்டங்கள் எதற்கு என்று கேள்வி கேட்பவர்களுக்கான பதிலாகப் பெரியார் பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் சிறப்பான விளக்கங்களைப் பதிலாகத் தந்துள்ளார்.

பெண்களின் தலைமுடியை மேகத்திற்கும், மயில் தோகைக்கும் வர்ணித்து வந்த பாடல்களும், உவமைகளும் ஏராளம். அப்படி வந்த அனைத்தையும் விடச் சிறப்பானதாகச் சங்க இலக்கியத்தில் ஆணின் அழகும், அவன் தலைமுடியின் சிறப்பும் மிக அழகான உவமைகளுடன் கூறப்பட்டுள்ளது. கபிலர் குறிஞ்சிப்பாட்டில் சொல்லும் ஆணின் தோற்ற வர்ணனை பெண்ணுக்குக் கவிஞர்கள் கூறும் சிறப்பினைத் தாண்டி வியப்பைத் தருகின்றது. ஆதிகாலத்தில் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானமாய் வாழ்ந்ததற்கான சான்றாக இச்செய்தியையும் சேர்த்துக் கொள்ளலாம். அணிகலன்கள் அணிந்து, மலர்களைத் தலையில் சூடி, வண்ண மலர்மாலைகளும், சிறந்த அணிகலன்களும் அணிந்து பெண்களுக்கு இணையாகத் தங்களை ஒப்பனை செய்து வாழ்ந்தனர் என்பது வியத்தகு தகவல்.

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோள் இரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடி வா.

எனத் தான் காணப் போகும் பெண்கள் மயங்கும்படியாக ஒப்பனைகள் செய்து அழகுபடுத்திய தோற்றத்துடன் வருகின்றான்.  அவனைப் பார்த்தவர்கள் யார் இவன்? என்று அச்சப்பட்டு, வியந்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இத்தகைய பொலிவுமிக்க தோற்றத்துடன் வந்து நிற்பவன் யார்? முருகனோ? முருகன் என்பவன் சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்கள் போற்றும் ஆற்றல் மிகுந்தவனாகவும், அனைவரின் அன்புக்குரியவனாகவும் வாழ்ந்திருக்கின்றான் என்பதையும் குறிஞ்சிப்பாட்டு வழியாகக் கபிலர் கூறியுள்ளார். தமிழர் போற்றிய, அன்பு செலுத்திய தமிழர் தலைவன் முருகன் அழகன்; என்றும் பேரழகன்.

பாடலின் குறிப்பு

எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம் 
தெய்வம்- சேயோன் – முருகன் 
துறை – அறத்தொடு நிற்றல் 
பாவகை - ஆசிரியப்பா 
கூற்று- தோழி 
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)

முருகனா? யாரிவன்?

எண்ணெய் நீவிய, சுரி வளர் நறும் காழ்த்
தண் நறுங் நகரம் கமழ மண்ணி, 
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா, 
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை 
அணிமிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து
மணி நிரம் கொண்ட மர இருங் குஞ்சியின், 
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் 
வண்ண வண்ணத்த மலர் அம்பு விரைஇய 
தண் நறுந் தொடையல், வெண் போழ்க் கண்ணி, 
நலம் பெறு சென்னி, நாம் உற மிலைச்சி, (107-116)

அருஞ்சொற்பொருள்

எண்ணெய் நீவிய – எண்ணெய் தடவிய 
சுரி வளர் – முறுக்கியது போல, சுருண்டு வளர்ந்த
நறும் காழ் – நறுமணம் உடைய, காழ்- கருமை 
தண் – குளிர்ந்த 
நறுங் நகரம் – நறுமணம் மிகுந்த சாந்து 
கமழ மண்ணி – மணக்கும்படிப் பூசிய 
ஈரம் புலர – ஈரம் உலரும்படி 
விரல் உளர்ப்பு – விரலினால் அலைத்து 
அவிழா – அவிழ்த்து, விரலினால் கூந்தலில் உள்ள சிக்கினைப் போக்கி 
காழ் அகில் – காழ்- வைரம், வைரம் பாய்ந்த அகில் 
அம் புகை – அழகிய புகை 
கொளீஇ – கொளுத்தி, ஊட்டுதலிலனால் 
யாழ் இசை – யாழின் இசையைப் போன்று 
அணிமிகு வரி – அழகு மிகுந்த பாட்டு, அணி- அழகு, வரி- பாட்டு 
மிஞிறு – வண்டுகள் 
ஆர்ப்ப – ஒலிக்க,  
தேம் – வாசனை 
கலந்து - கலந்த 
மணி நிரம் கொண்ட – நீல நிற மணியின் நிறத்தைக் கொண்ட 
மர இருங் குஞ்சியின் – பெரிய கருமையான தலைமுடியின், (குஞ்சி- ஆண் தலைமுடி) 
மலையவும் -மலையில் உள்ளவையும் 
நிலத்தவும் – நிலத்தில் உள்ள பூக்களும் 
சினையவும் – சினை- கிளை, மரக் கிளையிலில் பூத்தவையும், 
சுனையவும் – குளங்களில் பூத்தவை, 
வண்ண வண்ணத்த மலர் – பல வண்ணங்களில் உள்ள மலர்கள்
ஆய்பு- தேர்ந்து எடுத்து 
விரைஇய – தொடுத்த, கட்டிய 
தண் நறுந் தொடையல் – குளுமை தரும் நல்ல மணமுடைய மலர்மாலை 
வெண் போழ்க் கண்ணி – வெண்மையான பனை மரத்தின் குருத்தினால் செய்த மாலை 
(போழ்- பனங்குருத்து அல்லது தாழை மடல், கண்ணி- தலையில் அணியும் மாலை) 
நலம் பெறு சென்னி – சிறப்பினையும், அழகினையும் பெற்ற முருகனோ என்று 
நாம் – நாம்,
உற மிலைச்சி – அச்சம் ஏற்பட அணிந்து கொண்டு,

பாடலின் பொருள்

பல காலங்களாகத் தொடர்ந்து எண்ணெய் தேய்த்ததினால் சுருண்டு வளர்ந்த, கருமையான நிறமுடைய கூந்தலில், நறுமணமுள்ள சந்தனம் பூசப்பெற்றுக் குளித்து முடித்தபின், அந்த ஈரம் காயும்படி விரல்களால் தட்டி, சிக்கலைப் பிரித்து, வைரம் பாய்ந்த அகில் நல்ல புகையூட்டப் பெற்ற புகையில் உலர்த்தும்போது, யாழ் இசையைப் போன்று அழகு மிகுந்த இனிமையான இசை கலந்து வண்டுகள் பறக்கும். அகிலின் புகை பட்டதினால் நீலமணி போன்ற நிறம் கொண்டதுமான கருமையான பெரிய குடுமையில் மலையிலிருந்தும், நிலத்திலிருந்தும், மரத்தின் கிளைகளிலிருந்தும், குளங்களிலிருந்தும் பல நிறங்களில் உள்ள மலர்களைத் தேடி ஆராய்ந்து பறித்துக் கட்டப்பட்ட குளுமையான நறுமணம் கொண்ட மலர் மாலைகளையும், வெண்மையான பனங்குருத்தால்/தாழைமடலினால் செய்த மாலையையும், இவன் முருகனோ என்று காண்பவர்கள் அச்சம் உண்டாகுமாறு தலையில் அணிந்துகொண்டு வந்தான் தலைவன்.

ஊரில் தனியழகன்

பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇச், செந்தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,
அம் தளிர்க் குவவு, மொய்ம்ப அலைப்பச் சாந்து அருந்தி, 
மைந்து இறை கொண்ட, மலர்ந்து ஏந்து அகலத்து, 
தொன்று படு நறும் தார் பூணொடு பொலிய, 
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக்கையின் 
வண்ண வரிவில் ஏந்தி, அம்பு தெரிந்து, 
நுண் வினைக் கச்சைத் தயக்க அறக் கட்டி, 
இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல் 
துயல் வரும் தோறும் திருந்து அடிக் கலாவ. (117-127)

அருஞ்சொற்பொருள்

பைங்கால் பித்திகத்து – பசுமை நிறக் காம்புடைய பிச்சி மலரின்
ஆய் இதழ் அலரி – அழகான இதழ்கள் உடைய மலர்கள்
அம் தொடை – அழகாகத் தொடுத்த, கட்டிய 
ஒரு காழ் வளைஇச் – ஒரு சரத்தை வளத்தை, ஒரு மாலையை, 
செந்தீ- சிவப்புத் தீ, நெருப்புப் போன்ற 
ஒண் பூம் பிண்டி – ஒளி தரக்கூடிய அசோக மரத்தின் பூ, பிண்டிப்பூ, (ஒண்-ஒள்- ஒள்ளிய) 
ஒரு காது செரீஇ – ஒரு காதில் சொருகி. செரீஇ- சொருகி 
அம் தளிர் – அந்த அழகிய தளிர் 
குவவு மொய்ம்பு அலைப்பச் -  திரண்ட தோளில்மேல் அசைய, 
(குவவு- திரண்டு, மொய்ம்பு – தோள், அலைப்ப-அசைய) 
சாந்து அருந்தி – சந்தனத்தைப் பூசி 
மைந்து இறை கொண்ட- வலிமை/ ஆற்றல் தங்கிக் கிடந்த 
மலர்ந்து ஏந்து அகலத்து – அகன்று விரிந்த மார்பில், (அகலம்- மார்பு) 
தொன்று படு – தொன்று தொட்டு அணிந்திடும் 
நறும் தார் – நறுமணம் தரும் மாலை  
பூணொடு பொலிய – அணிகலன்களுடன் சேர்ந்து பொலிவு தர 
செம் பொறிக்கு ஏற்ற – செவ்விய இலக்கணங்களுக்கு ஏற்றவாறு 
வீங்கு இறைத் தடக்கையின் – பெரிய முன்கையின் பெரிய கைகளில் 
வண்ண வரிவில் ஏந்தி – வண்ணத்தை வரிந்து கட்டிய வில்லை ஏந்தி 
அம்பு தெரிந்து – அம்பை ஆராய்ந்து பிடித்து 
நுண் வினைக் கச்சை – நுணுக்கமான வேலைப்பாடு செய்த கச்சை கட்டிய சேலை 
தயக்க அறக் கட்டி – அசைவு இல்லாமல் கட்டி 
இயல் அணிப் பொலிந்த – இயல்பான, அழகினால் பொலிந்த 
ஈகை – பொன் 
வான் கழல் – உயர்ந்த கழல், வீரக்கழல் 
துயல் வரும் தோறும்- அசையும்தோறும் 
திருந்தடி– திருத்தமான அடிகள் 
கலாவ – உயர்ந்தும், தாழ்ந்தும் அசைய. (117-127)

பாடலின் பொருள்

பசுமை நிறமான காம்புகளைக் கொண்ட பிச்சி மலரின் அழகிய இதழ்களால் சிறப்பாகக் கட்டப்பட்ட மாலையைத் தலைமுடியில் சுற்றியிருந்தான் தலைவன். ஒரு காதில் செருகியிருந்த சிவப்பு நிறத் தீயை நினைவுபடுத்தும் ஒளியையுடைய பிண்டிப் பூக்களை பூக்கும் அசோகமரத்தின் தளிர்கள் அவனுடைய திரண்ட தோளில்மீது உரசியவாறு விழுந்திருந்தது. நறுமணமிக்க சந்தனம் தடவியிருக்கும் வலிமை மிகுந்த, அகன்ற மார்பில் தொன்று தொட்டு அணிந்திடும் நறுமணம் தரும் மாலைகள் அணிகலன்களோடு சேர்ந்து பொலிவு தரும்படி அணிந்திருந்தான்.

செவ்விய இலக்கணங்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ள பெரியதான முன்னங்கையை உடைய பெரிய கைகளில் நல்ல நிறமுடைய வரிந்த வில்லினையும், ஆராய்ந்து தேர்ந்து எடுத்த சிறந்த அம்புகளையும் பிடித்துக் கொண்டு, நுணுக்கமான வேலைப்பாடு செய்த சேலையினை அழகாகத் தன் இடுப்பின் அசையாசதபடிக் கட்டிக் கொண்டு, இயல்பினிலேயே அழகாக அமைந்த பாதங்களை எட்டி வைத்து நடக்கும்போது காலில் அணிந்திருக்கும் வீரக்கழல் நடக்கும்போதெல்லாம் உயர்ந்தும், தாழ்ந்தும் அசைந்து கொண்டிருந்தது.

எளிய வரிகள்

பச்சை நிறப் பிச்சி பூ இதழ்கள் சேர்த்துக்
கட்டிய மாலையைத் தலைமுடியில்
சுற்றியிருந்தான் தலைவன்.
ஒருகாதில் செருகிய தீயைப் போன்ற
ஒளிதரும் அசோகமரத்தின் பிண்டிப் பூக்கள்
அவன் திரண்ட தோளில்மீது விழுந்து உரசும்.

சந்தனம் பூசிய வலிமை நிறைந்த
அகன்ற தோளில் அணிந்திருந்த
நறுமணம் கொண்ட மாலையை 
அணிகலன்களுடன் அழகுக்கு 
அழகு சேர்த்திட அணிந்திருந்தான்.

செவ்விய இலக்கணம் பொருந்திய முன்னங்கை 
உடைய பெரிய கைகள் கொண்டவன். 
நல்ல நிறமுள்ள வரிந்த வில்லினை ஏந்தி, 
ஆராய்ந்து தேர்தெடுத்த அம்பினைப் 
பிடித்து ஏந்து வந்தான்.

நுண்ணிய வேலைப்பாடுகள் செய்த
சேலையினை அசையாதபடிக் கட்டி,
இயல்பான அழகு பெற்ற பாதங்களில்
பொன்னால் செய்யப்பட்ட உயர்ந்த 
வீரக்கழல்கள் அணிந்திருந்தான்.
அவன் நடக்கும் பொழுதெல்லாம் 
உயர்ந்தும், தாழ்ந்தும் அசைந்து 
கொண்டிருக்கும் சிறப்புடையவன் 
தலைவன் ஆணழகன் வந்தான்.

இதுபோன்றதொரு உண்மைத் தகவல்கள் நிறைந்த பாடல்களைப் படித்து முடித்ததும் தோன்றும் எண்ணங்களில்   வண்ணங்கள் நிறைக்கும் கபிலரின் தமிழ். கபிலர் சொன்னவன் எப்படி இருந்திருப்பான்? இன்று அவன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்விகளோடே மீண்டு வரமுடிகின்றது.

சகலகலா வல்லவனே
சலவை செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே தேவதையின்
மன்னவனே….

என்று பாடித் திரிந்திருப்பாளோ அவன் காதலி. மயங்கியிருப்பாளா? கொஞ்சிக் கொஞ்சிக் கனவுகளில் காதல் நிறைத்திருப்பாளா? திருஷ்டிப்பொட்டு வைத்திருப்பாளா? அவனைப் பார்க்கும் பெண்களிடம் சண்டையிட்டிருப்பாளா? அவனைக் கண்ட பொழுதில் நடந்தவற்றையெல்லாம் பார்த்திடத் துடிக்கும் உள்ளம், மீண்டும் மீண்டும் படித்து ஆறுதல் கொள்கின்றது. அழகை நிறைத்து, அழகுக்கு அழகு சேர்த்து வருபவனை வேண்டாம் எனச் சொல்லும் பெண்ணும் இருப்பாளோ? இப்படியொருவன் காதலனாக வேண்டும், காதலனாக வந்தால் அவள் உள்ளம் பாடும்.

                                                                                        கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய வாரம் : பூவே பூச்சூடவா