கண்ணதாசன்… மரணமற்ற மகாகவி!

தமிழ் திரையுலகத்திலும் அரசியல் களத்திலும் தனி முத்திரையுடன் அழியாப் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசனின் 92வது பிறந்த நாள் இன்று. 1927ம் ஆண்டு ஜுன் 24ம் தேதி காரைக்குடி அருகே சிறுகூடல் பட்டி கிராமத்தில் பிறந்தவர். அந்த கண்ணதாசன் எவ்வளவு எழுதினாலும் அவனின் காதல் பாடல்கள், பெண்களின் மனதையும் அழகையும் நளினத்தையும் சொல்லும் பாடல்கள், காதல் தவிப்பினை சொல்லும் பாடல்களின் அழகே தனி. ஆயிரம் ரோஜா தோட்டங்களில் மொகலாயரின் ரோஜா தோட்டம் தனித்து நிற்பது போலவும், ஆயிரம்
 

மிழ் திரையுலகத்திலும் அரசியல் களத்திலும் தனி முத்திரையுடன் அழியாப் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசனின் 92வது பிறந்த நாள் இன்று. 1927ம் ஆண்டு ஜுன் 24ம் தேதி காரைக்குடி அருகே சிறுகூடல் பட்டி கிராமத்தில் பிறந்தவர்.

அந்த கண்ணதாசன் எவ்வளவு எழுதினாலும் அவனின் காதல் பாடல்கள், பெண்களின் மனதையும் அழகையும் நளினத்தையும் சொல்லும் பாடல்கள், காதல் தவிப்பினை சொல்லும் பாடல்களின் அழகே தனி.

ஆயிரம் ரோஜா தோட்டங்களில் மொகலாயரின் ரோஜா தோட்டம் தனித்து நிற்பது போலவும், ஆயிரம் ஆலயங்களில் தஞ்சை ஆலயம் தனித்து நிற்பது போன்றதுமான வரிகள் அவை.

காதலின் ஒவ்வொரு படிநிலைக்கும் எழுதினான் அவன். அது காதல் பூக்கும் தருணமாகட்டும், வெளிபடுத்தும் இடமாகட்டும், அதிலே கலந்து உருகுமிடமாகட்டும், அது வெற்றி என்றால் கொண்டாடும் பாடல் தோல்வி என்றால் கதறும் பாடல் என்பதில் அவருக்கு நிகர் அவரே.

ஒன்றா இரண்டா? கம்பனையும் அகநானூற்று புலவர்களையும் கலந்து கொடுத்து அவர் எழுதிய பாடல்களின் தன்மை எக்காலமும் கிளாசிக்.

“காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே..” என சொன்னதாகட்டும்

“கண்ணே கலைமானே,
நீ இல்லாமல் எது நிம்மதி?
நீதானே என் சந்நிதி” என காதலிக்கு தாலாட்டு பாடியதாகட்டும்

“மணிப்புறாவும் மாடப்புறாவும் மனதில் பேசிய பேச்சல்லோ” என மங்கையின் மனதை சொன்னதாகட்டும்

“பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை..” என புதுபெண்ணின் மயக்கத்தை சொன்னதாகட்டும்

“பாரத்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ” என பழைய காதலை நினைத்ததாகட்டும்

“காதல் சிறகை காற்றினில் விரித்து” ஏன ஏங்கியதாகட்டும்

“எங்கிருந்தாலும் வாழ்க , இதயம் அமைதியில் வாழ்க, மஞ்சள் வளத்துடன் வாழ்க, மங்கல குங்குமம் வாழ்க..” என வாழ்த்தியதாகட்டும்

“கடவுள் அமைத்து வைத்த மேடை.. என காட்டு விலங்கு பறவைகள் குரலிலே வேதனையினை வேடிக்கையாக காட்டியதாகட்டும்

அடிக்கடி ஊடல் கொள்ளும் காதலியினை “அதிசய மலர் முகம்… தினசரி பலரகம் ஆயினும் என்னம்மா? தேன்மொழி சொல்லம்மா” என்றதாகட்டும்

காதல் கொண்ட ஆணின் மனதை பெண்குரலில் “எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ?” என பாடியதாகட்டும்

பனியில் நனைந்த தளிர் போலவும், மேகம் கவ்விய மலை போலவும், மலையில் ஓடும் தெளிந்த ஓடையின் குளிர் நீரை முகத்தில் தெளித்தது போல காதலைச் சொன்னவன் அவன்.

ஆளில்லா கடற்கரையில் காலைத் தொட்டுச் செல்லும் அலைகள் போல அவனின் வரிகள் எந்நாளும் காதலர் நெஞ்சில் அடித்துகொண்டே இருக்கும். அவனை விட அற்புத காதல் கவிஞன் யாருமில்லை.

அவனின் தாலாட்டு பாடல்களை கவனியுங்கள். அதிலும் துளி காதல் வந்துவிட்டுத்தான் செல்லும். நிச்சயம் அவனிடம் ரசனை இருந்திருக்கின்றது, மனம் நிறைய காதல் இருந்திருக்கின்றது, அது வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அருமையான சுகமான பாடலாக வெளிபட்டிருக்கின்றது.

அவன் பாடலை கவனியுங்கள், இந்துக்களின் கடவுள் முதல் இதிகாச பாத்திரங்கள் வரை எல்லோரின் இடத்தில் இருந்தும் காதல் பாடல் பாடினான். அவனால் தசரதனின் காதல், ராமனின் காதல், கண்ணனின் காதல் என எல்லோரின் இடத்தில் இருந்தும் பாட முடிந்திருக்கின்றது. இந்திரனை போலவும் பாட முடிந்தது, சந்திரனை போலவும் காதலில் உருக முடிந்தது.

ஆண்டாள், மீராவின் இடங்களில் இருந்தும் அவனால் காதல் பாடலை எழுத முடிந்தது. அவர்கள் என்ன? அவனால் பாரதியின் இடத்தில் இருந்தும் பாட முடிந்தது.
ஒரு காதல் தோல்வியில் முடிந்தால் எப்படி அழவேண்டும் என்பதையும் தன் பாடலில் அழகாக அழுதுகாட்டிய கவிஞன் அவன்.

மானிட குலத்துக்கே உண்டான காதல் உணர்ச்சியினை அந்த அழகினை தங்க தமிழில் தேன் கலந்து கொடுத்த கவிஞன் அவன். ஷேக்ஸ்பியர் சொல்லாமல் விட்ட மீதி காதலை தமிழில் சொல்ல அவதரித்து வந்தவன் அவன், அப்படி காதலை கொண்டாடி எழுதினான்.

ஒரு இடத்திலும் பெண்களையோ, காதலையோ அவன் தாழ்த்தி எழுதியதில்லை, ஒரு வரி கூட இல்லை. பெண்களால் சந்நியாசியான பட்டினத்தார் கதைகளிலும், பத்ருஹரி கதைகளில் கூட அவர் பெண்களை குறைத்துச் சொல்லவில்லை.

அதிலும் தடுமாற்றம் நிறைந்தவர்கள் என சொன்னாரே அன்றி தவறாக சொல்லவில்லை. அந்த அளவு அவன் காதலை மதித்திருக்கின்றான், இனம்புரியா அந்த இன்ப உணர்வு கடவுளின் கட்டளை, பூர்வ ஜென்ம தொடர்ச்சி என்பது அவனின் அசைக்க முடியா நம்பிக்கை.

காரணங்களின்றி காரியமில்லை என்றவன் காரணங்களின்றி காதலும் வராது என அடித்துச் சொன்னான். காதல் என்பது எப்பொழுது யாருக்கு யார்மேல் வரும் என்பது தெரியாது என்பதும், அது ஒருவனின் வாழ்வினை புரட்டி போடும் ஆண்டவன் கட்டளை என்பதும் அவன் கூற்று.

அதனால் காதலை அவன் மனமார மதித்தான், பாடினான். கண்ணகியினை கொண்டாடிய அவன் மாதவியின் காதலைப் போற்றினான். நிறைவேறா சூர்ப்பனகை காதலை கூட அனுதாபமாக எடுத்து சில பாடல்களைக் கொடுத்தவன் அவன்.
எல்லா காதலையும் அவன் மதித்திருகின்றான்..

எராளமான பாடல்களை அவன் காதலுக்காக எழுதிக் குவித்தாலும், அந்த பாடல் எந்நாளும் வேறு உயரம்

“உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இந்த உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்துவிடு

காதல் என்பது தேன்கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய் போனால் மனம் வாடும்”

அத்தோடு விட்டானா?

பிரிந்தவர் கூடினால் அவர்கள் மனம் எப்படி இருக்கும் என்பதை சொன்னதில் உயர நிற்கின்றான் கவிஞன்.

“பிரிந்தவர் ஒன்றாய் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி
காதல் கோவில் சந்நிதி”

ரத்தம் முழுக்க தமிழும், இதயம் முழுக்க காதலும் இருக்கும் எல்லோருக்கும் அவன் ஒரு அதிசயமே.

வாழ்க நீ எம்மான்

தமிழும், தமிழ் காதலர்களும் இருக்குமட்டும் உனக்கு மரணமே இல்லை
ஒவ்வொரு காதல் பிறக்கும்பொழுதும் நீ இங்கு பிறந்துகொண்டே இருப்பாய்..

– ஸ்டான்லி ராஜன்