“கன்னம் கிள்ளிப் போனால்” நூல் வெளியீடு

 

உலகப் பெண் கவிஞர்கள் பேரவையைச் சேர்ந்த கவிஞர் மஞ்சுளா காந்தி அவர்களது “கன்னம் கிள்ளிப் போனால்” கவிதை நூல் வெளியீட்டு
விழா  சென்னையில் நடைபெற்றது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அ.அருள்மொழி தலைமை தாங்கி நூலினை வெளியிட, கவியரசு கண்ணதாசனின் மகனான மருத்துவர் கமல் கண்ணதாசன் மற்றும் புனித இசபெல் பெண்நல மருத்துவர் ஜலஜா ரமேஷ் பெற்றுக் கொண்டனர். 

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரான கவிஞர் காவிரிமைந்தன், உலகப் பெண் கவிஞர்கள் பேரவையைச் சேர்ந்த கவிஞர்கள் சியாமளா ராஜசேகர் மற்றும் சொ.சாந்தி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மூத்த ஓவியக் கலைஞரான கவிஞர் அமுதபாரதி, மருத்துவர் முருகுசுந்தரம், நூல் வடிவமைப்பாளர் லோகராஜ், உலகப் பெண் கவிஞர் பேரவையின் கவிஞர்கள் பிரேமா, புனிதஜோதி, சோமசுந்தரி, இலலிதா போன்றோர் கலந்து கொண்டார்கள்.

புதுச்சேரி ஒருதுளிக்கவிதையின் வெளியீடான இக்கவிதை நூல், கவிஞர் மஞ்சு பெண்களின் உணர்வுகளைப் பேசும் கவிதைகளாக உருவாகியுள்ளது. 

வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரையில், பெண் உணர்வுகள் மட்டுமன்றி உக்ரைன் போர், மணிப்பூர் கொடுமைகள் போன்ற சமுதாய நிகழ்வுகளின் தாக்கம் கொண்டும் கவிதைகள் அளித்திருப்பது வரவேற்கத் தக்கது என்றும், மேலும் இது போன்று பெண்களின் உணர்ச்சி வெளிப்பாடுமாகக் கவிதைகள் வெளிவரவேண்டும் என்றும் கூறினார்.

மருத்துவர் ஜலஜா ரமேஷ்  பெண்கள் உடல் நலத் தடைகளைத் தாண்டி, சாதிப்பதின் தேவையைக் கூறினார். இதையே வெளிப்படுத்தும் விதமாகக் கவிஞர் மஞ்சுவின் மகன் தர்ஷன் அவர்களின் குறுங்காணொளியும் அமைந்தது.

ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்களது உரையில், கவிஞர் கண்ணதாசன் இளம் கவிஞர்களை ஊக்குவித்தது பற்றியும் கவிஞர் சுரதாவின் கருத்தான, நாம் போகாத இடத்திற்குப் புத்தகங்கள் செல்லுமென்பதை மேற்கோளாகக் காட்டியும் படைப்புகளைப் புத்தகமாக வெளியிட
ஊக்கப்படுத்தினார். 

“இலக்கிய உறவுகளையும் இனிய இதயங்களையும் இணைக்கின்ற கவிஞர் காவிரிமைந்தன்” என்று வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் பாராட்டியபடி கவிஞர் காவிரிமைந்தனின் உரை அமைந்திருந்தது. உலகப் பெண் கவிஞர்கள் பேரவைக் கவிஞர் இரம்யாநடராஜன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கவிஞர் மஞ்சுவின் ஏற்புரை மற்றும் கவிஞர் மஞ்சுவின் கணவர் திரு. முருகன் அவர்களது நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

- கவிஞர் பிரேமா இரவிச்சந்திரன், சென்னை