தனியார் வசமாகும் ரயில்வே! உண்மையிலேயே பயணியர் சேவை மேம்படுமா?

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே லாபம் ஈட்டுவதற்காக உருவாக்கப்படவில்லை. இந்திய ரயில்வே பல லட்சம் தொழிலாளர்களை கொண்டு இயங்குகிறது. பயணிகள் ரயிலை தனியார் இயக்கினால் 30 ஆயிரம்கோடி முதலீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 109 ஊர்களில் இருந்து புறப்படும் ரயிலை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம், நவீன கோச்கள், குறைந்த பராமரிப்பு செலவு, பயணநேரம் குறைப்பு வேலைவாய்ப்பு அதிகரிப்பு, மேம்பட்ட பாதுகாப்பு, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவம் என்ற சேவைகளை பயணிகளுக்கு வழங்க சில
 

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே லாபம் ஈட்டுவதற்காக உருவாக்கப்படவில்லை. இந்திய ரயில்வே பல லட்சம் தொழிலாளர்களை கொண்டு இயங்குகிறது. பயணிகள் ரயிலை தனியார் இயக்கினால் 30 ஆயிரம்கோடி முதலீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 109 ஊர்களில் இருந்து புறப்படும் ரயிலை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம், நவீன கோச்கள், குறைந்த பராமரிப்பு செலவு, பயணநேரம் குறைப்பு  வேலைவாய்ப்பு அதிகரிப்பு, மேம்பட்ட பாதுகாப்பு, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவம் என்ற சேவைகளை பயணிகளுக்கு வழங்க சில வழித்தடங்கள் தனியார் வசம் ஒப்படைக்க பட உள்ளன என்று  ரயில்வே அறிவித்துள்ளது. 

இயக்க வாடகை, எரிபொருள் செலவு மற்றும் மொத்த வருவாயில் பங்கு  அரசுக்கு கிடைக்கும்.  ரயில்வே  டிரைவர்கள், கார்டுகள் இந்த ரயில்களின் பணியில் இருப்பார்கள்.  35 ஆண்டுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயில்  அனுமதிக்க உள்ள 14 தடங்களில்  8 ரயில்கள் சென்னையில் இருந்து புறப்படும். 2 ரயில்கள் சென்னை வழியாகச் செல்லும்.

சென்னையில் இருந்து கோவை, கன்னியாகுமரி, மதுரை,  திருச்சி, நெல்லை,  மும்பை, மங்களூரு, டெல்லி ஊர்களுக்கு தனியார் ரயில் இயக்கப்படும். தொழிற் சங்கங்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பயண கட்டணம் உயரும், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், மாணவர்கள் ஏழைகள் பாதிக்கப்படுவர்.வேலைவாய்ப்பு, பணிப்பாதுகாப்பு, பறிபோகும்.  காலியாக உள்ள 3  லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாது. தனியார் இயக்கும் டெல்லி லக்னோ ரயிலில் வேலைசெய்யும் உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ரயில்வே தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது என தொழிற் சங்கத் தலைவர்கள் எச்சரிக்கிறார்கள். 

ஆம்னிபஸ்கள் கட்டணம் போல தனியார் ரயில் கட்டணம் ஆகலாம்.  வருவாய் ஈட்டாத தடங்களில்  ரயில் இயக்கம் நின்றுபோகும். நியாயமான கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கமாட்டார்கள் என்பது எல்லாம் உண்மை தான். ஆனால் ரயில்வே தொழிற் சங்கங்கள்  துறை லாபகரமாக இயங்க ஏன் ஆலோசனை கூறவில்லை?

மேற்கு வங்காளம், உ,பி பீஹார்  ம.பி. காஷ்மீர் மாநிலங்களில் பெரும்பாலும் டிக்கெட் எடுப்பதில்லை. பரீட்சார்த்தமாக  ரயில்வே தனியாருக்கு அந்த மாநிலங்களில் ரயில் இயக்கி காட்ட அனுமதி தரலாம். அரசுத்துறை லாபகரமாக இயங்கினால் தான் சாமானியருக்கும் நன்மை கிடைக்கும். வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு  மக்களுக்கு சேவை இவற்றை  எதிர்பார்க்க முடியும்.

அரசு பஸ்கள் லாபம் ஈட்டாத தடங்களில் நள்ளிரவு நேரங்களில் கூட இயங்குகிறது, ஆனால் தனியார் பஸ்கள் வசூல் அதிகம் வரும் தடங்களில் பயணிகள் அதிகம் வரும் நேரங்களில் மட்டும் இயக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இலவச பாஸ்கள் இல்லை. தனியார் பஸ்கள் ,, ட்ரைவர் கண்டக்டர் வரவில்லை என்று ஒரு ட்ரிப் கூட ரத்து செய்ய மாட்டார்கள். அரசுத்துறை என்றால் யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை என்ற போக்கு காணப்படுகிறது.

பி.எஸ்,என்,எல். பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளது. ஆனால் சேவையில் பெரிய மேம்பாடு தெரியவில்லை.  அதுபோல ரயில்வே தனியார்வசம் சென்றால் பயணியர் சேவை மேம்படும் என்று உறுதியாக நம்ப முடியாது. தொழிலாளர் சங்கங்கள்  ரயில்வே லாபம் ஈட்ட வழிகளை மக்களுக்கும் அரசுக்கும் விளக்க வேண்டும்.

நியாயமான கட்டணம் பயணவசதி  முகம் மலர்ந்த சேவை இவை தான் மக்களுக்கு தேவை. லாபமீட்டக்கூடிய துறைகளை அரசு முறையாக நிர்வகித்தால் தனியாருக்கு தாரைவார்க்க வேண்டியதில்லை. உரிமைக்கு போராடும் தொழில்சங்கம் கடமையையும் வலியுறுத்த வேண்டும்.பசுவதையை தடுக்கும் மத்திய அரசு ரயில்வே எனும் காமதேனுவை வதைக்கலாமா!

– வி.எச்.கே.ஹரிஹரன்