அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம்? - உச்சநீதிமன்றம் கேள்வி

 

பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3.10 கோடி பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நேற்று கைதான நிலையில் அவரது முன் ஜாமீன் மனு  மீதான விசாரணை  இன்று நடைபெற்றது.

ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் கைது செய்ய என்ன அவசரம். இது அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை  விதித்து உள்ளது.