கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? பதில் சொல்ல முடியாமல் தவித்த மத்திய அரசின் வழக்கறிஞர்!!

 

கொரோன தொற்று மத்திய பாஜக அரசுக்கு பல்முனை பிரச்னைகளை உண்டாக்கி விட்டது. சேலை கிழியாமல் முல்லை எடுப்பதுபோல நாட்டின் வருவாய் பாதிப்பு  ஆனாலும்   மக்களுக்கு  சேவைகளை  மேம்படுத்தவேண்டிய  இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் மோடி அரசு திணறுகிறது. திட்டவட்டமான தீர்வுகளையும் வழிகளையும் முன்வைக்க தெரியாத எதிர்க்கட்சிகள் குறைகளை விலாவாரியாக விஸ்தாரமாக மெருகூட்டுகின்றன.

உயர்நீதிமன்றங்களும் எக்குத்தப்பாக கேள்விகளை கேட்டு மத்திய அரசை திக்குமுக்காட வைக்கின்றன. நீதிமன்றங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நழுவ முடியாது, வாய்தா வேண்டுமானால் கேட்கலாம். கொரோனா 2 வது சுற்று வருமுன் கடந்த 14  மாதங்களாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல்  மத்திய அரசு என்ன செய்து கொண்டு இருந்தது? தொற்று நோயை ஒழிக்க தற்காலிக நடவடிக்கைகள் போதாது.  அசாதாரண முறையில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நன்றாக திட்டமிட்டு இருக்கவேண்டும். என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  சஞ்சீப பானர்ஜி மத்திய அரசை   கண்டித்தார்.

நீதிபதியின் கேள்விகளுக்கு மத்திய அரசின் வழக்கறிஞரால் உரிய பதில் தர முடியவில்லை. கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வழக்கறிஞரால் பட்டியலிட முடியவில்லை.  நீதிபதி எழுப்பிய வினாக்கள் எல்லா சாமானியன் நெஞ்சிலும் எழத்தான் செய்கின்றன. பலன்தரக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக திட்டமிட்டு நீதிமன்றத்தில் முன்வைத்தால் சாமானியனுக்கு நம்பிக்கை பிறக்கும். நிபுணர்களிடம் ஆலோசனை கேட்பதில் ப்ரோடோகால் படிநிலை அந்தஸ்து பாராட்ட தேவை இல்லை.

-வி.எச்.கே.ஹரிஹரன்