ஒமைக்ரான் வைரஸ் சாதாரண காய்ச்சலை போன்றது தான் - உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

 

உத்திரபிரதேசத்தில் 15 - 18 வயது வரையிலான 1.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி முதன்முதலாக தென்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் பரவத்தொடங்கியது. இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதையடுத்து இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும், இதேபோன்று மற்ற பெரியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “கொரோனா பரவலை தடுக்க 15 - 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந் தேதி முதல் தொடங்கப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் இன்று நடைபெற்ற 15-18 வயது வரையிலான சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “ஒமைக்ரான் வேகமாக பரவி வருவது உண்மைதான்.இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் தேவை.இரண்டாம் அலையை ஒப்பிடுகையில் இதன் வீரியம் குறைவு.எனவே,அச்சப்பட தேவையில்லை.

டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைய 15 - 25 நாட்கள் தேவைப்பட்டன.ஆனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டால் விரைவிலேயே குணமாகிவிடலாம். எனினும் இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மாநிலத்தில் 8 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

15 - 18 வயது வரையிலான 1.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 2150 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. லக்னோவில் மட்டும் 39 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.” என்று கூறினார்.