தங்கள் உயிரை பெரிதாக நினைப்பவர்கள் நாட்டின் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது! பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சன்னி அதிரடி!!

 

தங்கள் உயிரைப் பெரிதாக நினைப்பவர்கள், இந்தியா போன்ற பெரிய நாட்டின் முக்கியப் பொறுப்புகளுக்கு வரக்கூடாது என்ற சர்தார் வல்லபாய் பட்டேலின் வாசகத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பஞ்சாப் முதலமைச்சர் சரன்ஜித் சன்னி.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு அவருடைய உயிருக்கு அபாயம் ஏற்பட்டதாக பாஜகவினர் நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்களும், பிரதமரின் ஆயுளைக் காக்க யாகங்களும் செய்து வருகிறார்கள்.  பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக குற்றம் சாட்டியும் வருகின்றனர் பாஜகவினர்.

பஞ்சாப் முதலமைச்சர் சரன்ஜித் சிங், 70 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்த பிரதமரின் கூட்டத்திற்கு 500 பேர் மட்டுமே வந்திருந்ததால் அப்செட் ஆன பிரதமர் பயணத்தை ரத்து செய்து விட்டு காங்கிரஸ் கட்சியின் மீது பழிபோட்டு நாடகம் ஆடுகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார். பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு என்றால் அதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள எஸ்பிஜி பாதுகாப்பு படையையும் உள்துறை அமைச்ச்ரையும் தானே கேள்வி கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதமரே தான் உயிர் பிழைத்து வந்ததற்கு பஞ்சாப் முதலமைச்சருக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறியுள்ளதால், இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தங்கள் உயிரைப் பெரிதாக நினைப்பவர்கள் இந்தியா போன்ற நாட்டின் முக்கியப் பொறுப்புகளுக்கு வரக்கூடாது என்று முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியிருந்த வாசகத்தை ட்வீட் செய்துள்ளார் பஞ்சாப் முதலமைச்சர் சரன்ஜித் சன்னி. இது சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.