மாணவர்கள் விஷயத்தில் ஒன்றிய அரசு கண்மூடித்தனமாக உள்ளது... நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்!

 

மாணவர்கள் விஷயத்தில் ஒன்றிய அரசு கண்மூடித்தனமாக உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “மாணவர்கள் விஷயத்தில் ஒன்றிய அரசு (GOI) கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது.  நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக  நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால் ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஒத்திவைக்க முடியாது.

திட்டமிட்டபடி நீட் தேர்வு கட்டாயம் நடந்தே தீரும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.