மதுபானம் வாங்குவோருக்கு மானியம் நிறுத்தம்; இதை நான் கூறவில்லை..! - ரத்தன் டாடா

 

உங்களுடைய செல்போனுக்கு வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து, அதன் பிறகு அதை மற்றவருக்கு பகிருங்கள். இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மாற்றம் என்பது நம்மிடமிருந்தே தொடங்கட்டும்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முழுவதும் புகைப்படங்கள், கட்டுரைகள், வீடியோக்கள், மீம்ஸ்கள் என பல்வேறு கண்டெண்ட்டுகள் வலம் வருகின்றன. சில நேரங்களில் எது உண்மை, எது பொய் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும் அவல நிலையும் இருக்கத்தான் செய்கிறது.

யாராவது ஒரு பிரபல நபரைக் குறிப்பிட்டு, ‘அவர் அதைக் கூறினார், இதைக் கூறினார்’ என்று எதையாவது கிளப்பிவிட்டு, இறுதியில் அதை வைரல் கன்டென்ட்டாக மாற்றி விடுகின்றனர்.

அப்படித்தான், “மது விற்பனையை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குவோருக்கு அரசு தரும் உணவுக்கான மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக உணவு வாங்க முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள். - ரத்தன் டாடா” எனும் ஒரு மீம்ஸை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இதையடுத்து, முடிந்தவரை போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் தன்னுடைய ஸ்டோரியில் அந்த செய்தியை பகிர்ந்து, “இது, நான் கூறவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார் ரத்தன் டாடா.

இதற்கு முன்பு, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் இப்படியான ஒரு சூழலை எதிர்கொண்டார். இதையடுத்து அவர், “தவறான தகவல்கள் பரவுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, குறிப்பிட்ட அந்த செய்தியையும் வெளியிட்டு மறுப்பு தெரிவித்திருந்தார்.

எனவே, உங்களுடைய ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கு எத்தகைய செய்தியோ, புகைப்படங்களோ, வீடியோக்களோ வந்தாலும் அதன் உண்மைத்தன்மை என்ன என்று அறிந்துகொண்டு, அதன் பிறகு அதை மற்றவருக்கு பகிருங்கள். இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மாற்றம் என்பது நம்மிடமிருந்தே தொடங்கட்டும்.