ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு... பதவி விலகுவாரா அஜ்யஃ மிஸ்ரா..?

 

ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3-ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தின் போது ஒன்றிய அமைச்சர் மகனின் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

விவசாயிகள் தந்த புகாரின் அடிப்படையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகளை இடித்து தள்ளியப்படி சென்ற செயல் இருவரின் நன்கு திட்டமிடப்பட்ட சதிச் செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரின் மகன் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கிச் சுட்டதாகவும், அதில் விவசாயி சுக்விந்தர் சிங்கின் 22 வயது மகன் குர்விந்தர் இறந்தார் என கூறப்பட்டு உள்ளது. அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைக்க உத்தரப்பிரதேச போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

லக்கிம்பூர் விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமித்ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி வருவதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.