ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கும்!

 

இந்தியாவில் கொரோனா பரவலின் 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி முன்களப் பணியாளர்கள், வயதானவர்களை அடுத்து தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1-ம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

சமீபத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை இந்தியாவில் ஐதராபாத்தில் டாக்டர் ரெட்டி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் ரஷியாவில் இருந்து முதல் கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்து தருவதாகவும், அதன் பின்னர் படிப்படியாக இந்தியாவிலேயே தயாரித்து வழங்குவதாகவும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதி மே 1 ம் தேதி இந்தியாவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய தடுப்பூசி மூலம் இந்தியா தொற்றுநோயிலிருந்து விரைவில் வெளியேறிவிடும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.