மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி கால் தொட்டு வணங்கவும் தயார்; அவமானபடுத்தாதீர்கள் - மம்தா பானர்ஜி கோபம்

 

மேற்கு வங்க மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கக் கூடத் தயார் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

பின்னர் இந்த சேதங்கள் தொடர்பாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் அவர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்த கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடனான இந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டார்.

பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி அவமதிப்பு செய்ததாக பாஜகவினர் சாடி வரும் நிலையில் மத்திய அரசு மேற்குவங்கத் தலைமைச் செயலாளர் ஆலப்பன் பந்தோபத்யாயாவை மாற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி புயல் சேதத்தைப் பற்றி ஆய்வு செய்து ஆலோசனை நடத்திய போது அக்கூட்டத்தில் வராமல் 30 நிமிடங்கள் பிரதமரை காக்க வைத்த மம்தா பானர்ஜி, பிரதமரிடம் புயல் சேத அறிக்கையைக் கொடுத்து விட்டு தலைமைச் செயலரை அழைத்துச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து தலைமைச் செயலரை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. மாநில அரசை செயல்பட விடாமல் மத்திய அரசு இடையூறு செய்வதாக கூறிய மம்தா பானர்ஜி, தங்களைப் பணி செய்ய விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.