ஜனவரி 26-ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!!

 

கொரோனா பரவல் காரணமாக கோவாவில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும் புதிய வகை ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக மதுபான விடுதிகள், திரையரங்குகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவிகித எண்ணிக்கை அளவில் மட்டுமே மக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என கடந்த டிசம்பர் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 26-ம் தேதி வரை கோவாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை தொடர்ந்து கோவாவிலும் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.