நீட் தேர்வு தேதி அறிவிப்பு... நாளை மாலை முதல் விண்ணப்பப் பதிவு !!

 

நாடு முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது.

ஏற்கெனவே 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஒன்றிய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு எதிரான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும் கூட வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.