கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் - இந்திய ரயில்வே தகவல்

 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை காரணமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2.61 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.47 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,501 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

முதல் அலையை விட ஆக்ரோஷமாக சுழன்றடிக்கும் இந்த 2-வது அலையால் அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன. மேலும் பெரும்பாலான மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது

இதுகுறித்து இந்திய ரயில்வே கூறியதாவது,

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 4,002 பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும். இந்த ரயில் பெட்டிகளால் சந்தேகப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.