மும்பையில் போலி தடுப்பூசி முகாம்... கோகிலாபென் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் உட்பட 12 பேர் கைது!

 

மும்பையில் போலித் தடுப்பூசி முகாம் நடத்தியது தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத்தின் கோகிலாபென் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் உட்பட 12 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இந்த நிலையில், மும்பை சமதா நகரில் தனியாரால் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 4 நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 618 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அவர்களில் யாருக்கும் அதற்கான சான்றிதழ் வராததால் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். விசாரணையில் அது போலித் தடுப்பூசி முகாம் எனத் தெரியவந்தது.

இதையடுத்து 9 வழக்குகளைப் பதிவு செய்த காவல்துறையினர், மணீஷ் திரிபாதி என்கிற மருத்துவர் உட்பட 11 பேரைக் கைது செய்த நிலையில் தற்போது கோகிலா பென் மருத்துவமனையில் முன்னாள் ஊழியர் ராஜேஷ் பாண்டே என்பவரையும் கைது செய்துள்ளனர்.