இலவசத்தை ஒழிச்சிட்டு இந்த உ.பி. மாடலுக்கு மாறிடுவோமா?

 

உலகம் போற்றும் உன்னத ஆட்சி நடக்கும் உத்திரப்பிரதேசத்தில் பிணம் எரிக்க ரூ.22,000 செலவாகிறதாம். ட்விட்டரில் கதறுகிறார்கள், அதன் பின்னூட்டத்தில் ஒருவர் தெலுங்கானாவில் நாங்கள் 20 முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்கிறோம் என்று சொல்லியிருக்கார். இத்தனைக்கும் இவர்கள் கட்டையில் வைத்து தான் எரிக்கிறார்கள். அதற்கே இந்தப் பாடு.

சரி, நம்ம ஊரில் என்ன தான் செய்கிறார்கள் என்று விசாரித்தேன். சென்னை மாநகராட்சி முழுவதும் அரசு மின்சார மயானங்கள் இருக்கிறது. அதில் எங்கு நீங்கள் போனாலும் பிணத்தை எரிப்பதற்கு கட்டணமே கிடையாது. அரசே மின்மயானங்களை உருவாக்கி, அரசே இதற்கென பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு 10,000/- முதல் 15,000/- வரை ஊதியம் வழங்கி இறந்தவர்களின் பிணங்களை அரசே தன் சொந்த செலவில் எரித்து வருகிறது.

இதில் மின்மயானம் மட்டுமல்லாது BioGas மயானங்கள் இருக்கிறது. அதற்கு கட்டை வாங்கும் செலவுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூ.2000/- மாநகராட்சிக்கு வெளியே உள்ள இப்படியான மயானங்கள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்டு இருப்பதால் பணியாளர்கள் நேரடி அரசுப் பணியாளர்கள் ஆகவில்லை. அதனால் அவர்களுடைய சம்பளத்துக்கான வருமானத்தை மக்களிடம் வாங்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் இங்கே பிணம் எரிக்க வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூ. 2500/-

இதற்கு முறையான ரசீதும் தந்துவிடுவார்கள். இதெல்லாம் வேண்டாம், நாங்கள் பாரம்பரிய முறையில் கட்டையை வைத்து தான் எரிப்போம் என்றால் சென்னைக்கு வெளியே சுமார் ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை வசூலிக்கப்படுகிறது. 

ட்விட்டரில்ல் காணப்படும் ரூ.22,000 முதல் ரூ.25,000/- எங்கே? இந்த பாழும் தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் அதிகபட்சமான கட்டணமான ரூ.10,000/- எங்கே? படத்தில் போரூர் மின்சார மயானம். தமிழ்நாடளவில் இருந்த 543  பேரூராட்சிகளில் முதன் முதலாக போரூர் பேரூராட்சியில் தான் 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் எங்கப்பா பேரூராட்சித் தலைவராக இருந்தப்போ இந்த மின் மயானம் உருவாக்கப்பட்டது. பெயர் பலகையில் தெளிவாக இலவச தகன எரியூட்டு மின் மயானம் என்றிருக்கிறது.

குறிப்பு: இது எரியூட்டு கட்டணங்கள் மட்டுமே. சடங்கு சம்பிரதாயம் என்று நீங்கள் கூடுதலாக செலவு செய்வதற்கு அரசு பொறுப்பேற்காது.

இலவசத்தை ஒழிப்போம்!

- A.சிவகுமார்