நிலத்தை விற்று கனவுகளை நோக்கி ஓடும் இந்தியர்கள் – 4
இந்த PR machineryயின் அங்கமாக அரசியல் கட்சிகள் அரைகுறை ஆர்வலர்கள் என்று எல்லோருக்கும் பணம் செல்லுகிறது. இத்தகைய ஆய்வுகளில் மேற்கு பல்வேறு ஆய்வுகளுக்கு தடை கூட செய்துள்ளது. உணவு பாதுகாப்பு பற்றிய மாற்றுப் பார்வையை அங்கே உள்ள அறிவியல் அரங்கங்கள் விவாதிக்கின்றன. ஆனால் நமது நாட்டில் அத்தகைய விவாதங்கள் நிகழாது. பொதுவாகவே நமது ஆய்வுகளை மேற்குலகம் மதியாமல் இருக்கும் போக்கில் முக்கியமான அம்சம் என்று ஒன்று உண்டு.
நமக்கான ஆய்வு முறைமைகளை நமது கல்விப் புலங்களில் பெரிதாக பார்க்க முடியாது. ஏன் என்றால் நாம் மேற்கின் வியாபார நோக்கத்தில் முழுப் பங்காளிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. மருந்துக் கம்பெனிகள் பலவற்றின் விற்பனைப் பிரதிநிதிகளாக மருத்துவமனைகளை மாற்ற முடிந்த அவர்களால் நமது வயல் வெளிகளை அந்த நோக்கத்தில் மாற்ற முடியாதா என்ன?
பொதுவாக வேளாண்மையை விட்டு வெளியேறுங்கள் என்று நமது மக்களைப் பணிக்கும் அரசுகளை இந்த PR machinery கொண்டே உருவாக்குவார்கள். நான் சில தொலைகாட்சி விவாதங்களைப் பார்க்கும் போது தோன்றுவது இது தான். பல கருத்தாளர்கள் தங்கள் கட்சி நிலைப்பாடுகளைப் பேச மேடைகளை பயன்படுத்துவார்கள். அதனால் எல்லா தலைப்புகளிலும் எதையாவது உளறிவிட்டு செல்ல அவர்களுடைய கட்சி தலைமைகள் அவர்களுக்கு கட்டளையிடும்.
எல்லா தலைப்புகளையும் துரித உணவு போல சமைக்க நமது தொலைகாட்சி நெறியாளர்களும் பழக்கப்பட்டுவிட்டார்கள். சமீபத்தில் மோடியை ஆதரித்ததற்காக வருத்தப்பட்டு ஜோடி க்ரூஸ் அறிக்கைவிட்டார். ஒரு பிரச்சார ஊர்தியில் எல்லோரும் தொற்றிக் கொண்டு மோடியைக் காக்க வந்த கடவுளாக சித்தரித்தார்கள். அவர் வந்ததும் கார்ப்பரேட்களின் பிடி இறுக்கியது. பிரச்சாரம் செய்யப் போனவர்கள் ஏமாந்து திரும்பினார்கள்.
இன்னும் கம்பு சுற்றுபவர்கள் வருமானத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் ஆளுமைகள் என்று பலரின் கேவலமான வீழ்ச்சியை மோதி ஆதரவில் எளிதாக கண்டு கொள்ளலாம். ஜோடி க்ரூஸ் மீனவர்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஏமாந்திருக்கலாம். சிலர் ஈழத்திற்கு நல்லது நடக்கும் என்று சொன்னவர்கள் உண்டு.
இப்படியாக நாம் ஆட்சியாளர்களைப் பற்றி ஒரு கற்பனை ஓட்டம் உண்டு. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் விவசாயிகள் வாழ்க்கையை அழித்தொழித்துக் கொண்டிருக்கிறார் மோடி. அதற்கான பிரச்சார மேடைகளில் GMO முதற்கொண்டு விவசாயிகளை மலிவான கூலித் தொழிலாளியாக மாற்றுவது வரை பல கட்டங்கள் உண்டு. திமுக அதிகாரப்பூர்வமாக பகுத்தறிவுப் போர்வையில் இந்தப் பிரச்சாரங்களில் ஆட்களைக் களமிறக்கியுள்ளது.இணைய திமுகவினரின் செயல்களில் இருந்து தெரிகிறது.
காங்கிரசும் விதி விலக்கல்ல. ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் நிலைப்பாடும் அதுவே. வேளாண்மையை லாப நஷ்டக் கணக்கில் கீழான தொழில் ஆனது. நெசவு நசிந்தது. எல்லாம் எதிர்கால வளர்ச்சிக்கு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இனி இந்தப் பிரச்சாரங்களில் இருந்து தான் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
– இளங்கோ கல்லணை