நிலத்தை விற்று கனவுகளை நோக்கி ஓடும் இந்தியர்கள்!
அதாவது தொழில் நகரங்களாக. நேருவின் மாதிரிகளில் பஞ்சாப் விவசாய மாநிலமாக வளர்ந்தது. இது போல தற்போதய நகரங்களின் வளர்ச்சி என்ன? .
டெல்லியைச் சுற்றி வளர்ந்த குர்காவ்ன், பரிதாபாத் போன்ற நகரங்களில் தொழில்கள் வளர்ந்ததை விட வீட்டுமனை விற்பனை வளர்ந்தது. அதே போல புனேவும் கூட மும்பையின் வீக்கம் தாங்காமல் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது.
வளரும் நகரங்கள் என்று சொல்லப்பட்ட இந்தூர், கான்பூர், லக்னோ போன்றவற்றிலும் தொழில் வளர்ச்சி ஒன்றும் பெரிதாக இல்லை.
இரண்டாம் தர நகரங்கள் துணை நகரங்கள் போன்றவற்றின் வளர்ச்சியை தொழில் வளர்ச்சி என்று கருதிவிட முடியாது.
தகவல் தொழில் நுட்பத் தொழிலில் நேரடியாக மொத்தம் இந்தியாவில் பத்து இலட்சம் பேர் வேலை செய்தால் அதிகம். பெரிய நிறுவனங்கள் என்று சொல்லப்படுகிற டாடா கன்சல்டன்சி, மஹிந்திரா சத்தியம், எச்சிஎல், இன்போசிஸ் போன்றவை எவ்வளவு பேரை வைத்திருப்பார்கள் என்று நினைகிறீர்கள்?
டாடா கன்சல்ட்டன்சியும் இன்போசிசும் தலா என்பதாயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள், சத்யம் ஒரு ஐம்பதாயிரம், ஹெச்சிஎல் ஒரு நாற்பதாயிரம் என்று எண்ணி விடலாம். சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஐயாயிரம் பேருக்கு சராசரியாக வேலை கொடுக்கலாம். டிலாய்ட், ஐபிஎம் போன்றவை ஐயாயிரம் பத்தாயிரம் என்று தான் சொல்கிறார்கள்.
மற்ற ஆட்கள் ஐநூறு இருநூறு என்று ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நூற்றி இருபது கோடி பேர் உள்ள நாட்டில் செய்தித்தாள் முழுவதும் இவர்களை சுற்றி கதையாடலை உருவாக்குகிறார்கள்.
வளர்ந்து வந்த தனியார் வங்கிகள் இவர்களில் பத்து சதவீதம் மட்டுமே வேலை கொடுத்திட முடியும். நம்மிடம் நிலம் நீர் சலுகைகள் என்று வாங்கிக் குவித்திருக்கும் பல பன்னாட்டுக் நிறுவனங்கள் எவ்வளவு பேரை வேலைக்கு எடுத்திருப்பார்கள்?
ஹுண்டாய் போன்ற நிறுவனங்கள் வெறும் ஐயாயிரம் பேர் அதற்கும் கீழ் தான். தவிர எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட் என்று திரிபவர்கள் கொஞ்சம் பணம் பண்ணுகிறார்கள். இந்த யுகத்தை தரகர்கள் யுகம் என்றே தாராளமாக சொல்லலாம்.
நாம் கடந்த இருபது வருடங்களாக இந்த ஆட்களுக்காக இவர்களை மாதிரியாக வைத்து இந்தியாவைப் பற்றிய சித்திரம் ஒன்றை வரையப் பார்க்கிறோம். அதனாலேயே நிலத்தை விற்று கனவுகளை நோக்கி ஓடுங்கள் என்கிற கோசத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது.
நிலம் கல்விக்காக மருத்துவ செலவுக்காக விற்கப்படுவதே அதிகம். அடுத்தபடியாக பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு.
ஆக இந்தியாவின் மக்கட்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத மக்களின் வாழ்க்கைதான் நமது மாதிரி. ஆனால் சாய்நாத் போன்ற பத்திரிக்கையாளரின் பங்களிப்பு இங்கு தான் அவசியமாகிறது.
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து தேசிய ஆவணங்களின் தரவுகளை சரிபார்த்து முழுமையான சித்திரத்தை தருகிறார். இவரை ஏழ்மையின் வியாபாரி என்றெல்லாம் தூற்றுகின்றன வலது சாரி ஊடகங்கள்.
ஆனால் விவசாயிகளின் தற்கொலை துவங்கி நகரங்களுக்கு சென்ற மக்களின் வாழ்க்கைத் தரம் முதற்கொண்டு தரவுகளை வைத்து அலசுகிறார். இந்தியாவில் விவசாயிகளுக்கும் இந்நாட்டின் வளங்களுக்கும் நமது அரசுகள் செய்து கொண்டிருக்கும் துரோகம் வெளி வருகிறது.
இந்தப் பின்னணியில் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டங்களைப் பற்றியும் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு குறித்தும் இந்த பொருளாதாரம் என்ன செய்திருக்கிறது என்பதை தொடர்ந்து பேசலாம்.
– இளங்கோ கல்லணை