418 கிலோ வெள்ளி ஆபரணங்களால் முதல்வர் ஜெகன் மோகன் ஓவியம்..!

 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சேவையைப் பாராட்டி, 418 கிலோ வெள்ளி ஆபரணங்களைக் கொண்டு அவருடைய உருவப்பட ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையாற்றியதுடன், அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பினும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளின்படி நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

அவருடைய சேவையைப் பாராட்டியும், அவர் மீதான அபிமானத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், நெல்லூர் புறநகர் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத் தலைவர் முக்கல துவாரகா நாத் என்பவர், வெள்ளி ஆபரணங்களால் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.

இதையடுத்து, கோயம்புத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கேரளாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட கலை இயக்குநர் தவிஞ்சி சுரேஷ் என்பவர் வெள்ளியில் செய்யப்பட்ட கொலுசு, வளையல், கால் மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப்படத்தை உருவாக்கினார்.

இதுகுறித்து கலை இயக்குநர் சுரேஷ் கூறுகையில், “நகை அலங்கார நிபுணர்கள் 8 பேர் சேர்ந்து, 12 மணி நேரம் கடுமையாக சிரமப்பட்டு 35 அடி உயரம், 20 அடி அகலத்தில் 418 கிலோ வெள்ளி ஆபரணங்களால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப்படத்தை வடிவமைத்தோம்” என்றார்.