சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு... ஜூன் 3-ம் தேதிக்குள் கொள்கை முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

 

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் ஜூன் 3-ம் தேதிக்குள் கொள்கை முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1-ம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் எனத் தகவல் வெளியான. இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் விடுமுறை கால சிறப்பு அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், அடுத்த 2 நாள்களுக்குள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் அதற்காக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கொள்கை ரீதியான முடிவெடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.