மேற்குவங்கத்தில் நிவாரண பொருட்களை திருடிய பாஜக தலைவர்... காவல்துறையினர் வழக்குப்பதிவு!

 

நகராட்சியில் இருந்து புயல் நிவாரண பொருட்களை திருடியதாக திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சுவேந்து அதிகாரி. இவர் அதே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்குவங்கத்தில் யாஷ் புயல் தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை மேற்குவங்க அரசு மேற்கொண்டு வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்திற்கு ஒன்றிய அரசும் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பர்பா மெதினிப்பூர் மாவட்டம் கந்தி நகராட்சி அலுவலக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்களை பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியும், அவரது சகோதரரும் திருடி விட்டதாக திரிணாமல் காங்கிரஸ் கட்சி போலீசில் புகார் அளித்தது.

திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.