சிபிஎம் கட்சி அலுவலகங்கள் மீது பாஜகவினர் தாக்குதல்; திரிபுராவில் கலவரத்தை தூண்டிய பாஜக அரசு!

 

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் பாஜகவினர் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாஜக அங்கு எந்தவொரு அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கவில்லை, கொரோனா காலத்தில் மக்களை பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான மாணிக் சர்கார், கடந்த 6-ந் தேதி தனது தன்பூர் தொகுதிக்கு செல்ல முயன்றபோது, பாஜகவினர் அவரை தடுத்து நிறுத்தி தாக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அங்கு பதட்டமான சூழலை ஆளும் பாஜக அரசு உருவாக்கியது.

பாஜக அரசின் இத்தகைய அராஜகத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துள்ள நிலையில், சிபிஐ(எம்) கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தும் இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.

இந்த வன்முறை தற்போது உச்சம் பெற்றுள்ளது. கோமதி, செபகிஜலா மாவட்டங்களில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்முறை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களில் பாஜக தாக்குதலினால் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

இந்த வன்முறையின் போது, கம்யூனிஸ்டு ஆதரவாளரான வழக்கறிஞர் ரணதிர் தேப்நாத் வீட்டில் பாஜகவினர் தீவைத்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கட்சி அலுவலகம் மற்றும் சிபிஐ(எம்) தொண்டர்கள் 32 பேரின் வீடுகள் பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.

பாஜகவினரின் இத்தகைய தாக்குதலுக்கு, சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு கட்சியினரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.