யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட்!! 

 

இந்து மத கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பதியப்பட்ட வழக்கில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து அடுத்த நாளே எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றிருந்தவர் பாஜக எம்.எல்.ஏ. பிரசாத் மவுரியா.

இதனிடையே யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரசாத் மவுரியா தனது அமைச்சர் பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இந்த சம்பவம் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகிய பிரசாத் மவுரியாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்து மத கடவுள்களை அவமதித்ததாக பிரசாத் மவுரியா மீது 2014-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் பிரசாத் மவுரியா 12-ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், பிரசாத் மவுரியா நேற்று (ஜன.12) விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், பிரசாத் மவுரியாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி யோகேஷ் குமார் யாதவ் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.