இந்தியாவில் விரைவில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்!! பிரதமர் அதிரடி!

 

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கியப்பங்காற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்ய பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆலைகள் தடையில்லாமல் ஆக்ஸிஜன் வழங்குவதை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலைகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் அறிவுறுத்தலுக்கு இணங்க அழுத்த விசை உறிஞ்சுதல் தொழில்நுட்பத்தில் 551 பிரத்யேக ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

நாட்டில் பொது சுகாதார மருத்துவமனைகளில் கூடுதலாக 162 பிரத்யேக பி.எஸ்.ஏ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ பி.எம் கேர்ஸ் நிதி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.20.58 கோடியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.