செங்கல்பட்டு அருகே இளைஞர் அடித்து கொலை.. விநாயகர் சிலை ஊர்வலத்தில் விபரீதம்!
செங்கல்பட்டு அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில், பட்டாசு வெடிக்கக்கூடாது எனக்கூறிய இளைஞரை, செங்கற்களால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில், மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் பஜனை கோயில் அருகே வந்தபோது இளைஞர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் தனது வீட்டில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை எனவும், சரவெடி பட்டாசுகளை கொஞ்சம் தள்ளி வெடிக்குமாறு அந்த இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார் .
இதன் காரணமாக அந்த இளைஞர்களுக்கும் ஹேமநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதனை நேரில் கண்ட அவரது உறவினர் கார்த்திக் வயது(24) என்பவர் அந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கற்களை கொண்டு கார்த்திகை பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், கார்த்திக்கை தாக்கிய இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். தாக்குதலில் படுகாயமடைந்த கார்த்திக், தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கார்த்திக்கை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த சிவா, ராகேஷ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட இளைஞர்கள் என தெரியவந்தது. அவர்களுக்கும், கார்த்திக்கிற்கும் இடையே கடந்த வருடம் பேனர் ஒன்றை கிழித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. எனவே, அதற்கு பழிதீர்க்கும் விதமாக தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. தாக்குல் நடத்தி விட்டு தலைமறைவான இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.