மின்சாரம் தாக்கி இளைஞர் துடிதுடித்து பலி.. பக்தர்கள் அதிர்ச்சி!

 

திருச்செந்தூர் முருகன் கோவில் மின்சாரம் தாக்கி மதுரையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜோதிபாசு. இவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று வந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும், தரிசனத்தை முடித்து விட்டு கடலில் புனித நீராடி உள்ளனர்.

கடலில் நீராடிய பின்னர், ஜோதிபாசும் அவரது மகன் பிரசாத்தும் (22), திருச்செந்தூர் கோயிலின் புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்துள்ளனர். அப்போது புறக்காவல் நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த, எர்த் பைப்பில் மின் கசிவு இருந்துள்ளது. அதைக் கவனிக்காமல் அதில் கையை வைத்த பிரசாத் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரசாத்தின் தந்தை ஜோதிபாசு, பிரசாத்தைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவர் மீதும் லேசாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு, கோவிலில் இருந்த பக்தர்கள் மற்றும் போலீசார் பிரசாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பிரசாத் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரக்கூடிய கோயிலில், நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி தனது மகன் உயிரிழந்ததாக பிரசாத்தின் தந்தை ஜோதிபாசு குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.