கையெழுத்து இயக்கமா நடத்துறீங்க...முடிஞ்சா இதைச் செய்யுங்க! பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!!

 

இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்ற தலைப்பில் 10 வது நாளாக உங்களில் ஒருவன் மடல் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது வரையிலும் எந்த ஒன்றிய அரசும் மாணவர்களுக்கான கல்வி நிதியை நிறுத்தியதே இல்லை. பாஜக தான் மாணவர்களின் வயிற்றில் அடிக்கிற படுபாதக செயலை செய்துள்ளது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது பொறாமை கொண்டு தான் பாஜக அரசு வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.  இருமொழிக் கொள்கைக் கடைபிடிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் எந்த அளவில் பிற மாநிலத்தவருக்கு குறைவாக இருக்கிறார்கள். தமிழை மதிக்காமல் இழிவு படுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் உடன்பிறப்புகளுடன் உங்களில் ஒருவனாக முதல் ஆளாக இருப்பேன் என்று கட்சியினருக்கு கூறியுள்ளார்.

மேலும் ஆங்கிலத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், மும்மொழிக் கொள்கைக்காக பாஜகவின் கையெழுத்து சர்க்கஸை பார்த்து தமிழ்நாடே கைகொட்டிச் சிரிக்கிறது. அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். இதை 2026 சட்டமன்றத் தேர்தலில் முழக்கமாக வைத்து தேர்தலை பாஜக சந்திக்கட்டும். இந்தித்திணிப்பு குறித்து மக்கள் தீர்ப்பாக அது இருக்கட்டும் என்று பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்