திறக்கப்படாத பாட்டிலில் புழு, தூசி.. பீர் குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி!

 

சாத்தான்குளம் அருகே புழு மற்றும் தூசி கிடந்த பீர் குடித்த நபர், மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் நேற்று முதலூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார். அங்கு, அவர் தனது நண்பர்கள் சிலரைச் சந்தித்தார். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இவர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த திட்டமிட்டார். இதையடுத்து, அவர்கள் முதலூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் சென்றனர்.

அங்கு அவரவருக்குத் தேவையான மதுபானங்களைப் பலரும் வாங்கிய நிலையில், சண்முகம் 2 பீர் பாட்டில்களை வாங்கி உள்ளார். நண்பர்களுடன் மது அருந்தும் ஆர்வத்தில் பீர் பாட்டிலைச் சரியாகக் கவனிக்காமல், ஒரு பீர் பாட்டிலை திறந்து முழுவதுமாக குடித்து முடித்துள்ளார். இதனால் சிறிது நேரத்திலேயே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே பாரிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, பீர் பாட்டிலை நண்பர்கள் உற்றுப்பார்த்த போது, அதில் தூசும், புழுக்களும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சண்முகத்தை நண்பர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, சண்முகம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சண்முகம், மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.